ருஸைக் பாரூக்
புனித ரமழானை முன்னிட்டு குவைத் நாட்டு மன்னரின் விசேட வேண்டுகோளின் பேரில், குவைத்தைச் சேர்ந்த சமூக சேவையாளர் ஷெய்க் மன்ஸூர் ஜபாராவின் ஒருங்கிணைப்பில், குவைத் தனவந்தர் ஷெய்க் அல்லூசியின் நிதியுதவியில் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு நோன்பு துறப்பதற்காக சுமார் 50 மெற்றிக் டொன் பேரீத்தம் பழங்கள் அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையிலுள்ள முஸ்லிம் நிறுவனங்களின் மேற்பார்வையின் கீழ் மேற்படி பேரீத்தம் பழங்கள் முஸ்லிம் பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
இதனை கையளிக்கும் நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றது.
இதன்போது இலங்கையிலுள்ள முன்னணி இஸ்லாமிய சமூக சேவை அமைப்பான அல் ஹிமா அமைப்பின் பணிப்பாளர் ஷெய்க் எம்.ஏ.எம். நூருல்லாஹ்விடம் இலங்கையிலுள்ள குவைத் நாட்டு பதில் தூதுவர் கௌரவ உஸ்மான் அல் உமர், முதல்கட்ட பேரீத்தம் பழங்களை கையளித்தார்.
இந்நிகழ்வில் முஸ்லிம் சமய கலாசார நிறுவன அதிகாரிகள், மௌலவி தாஸீம் உட்பட ஏனைய முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இலங்கை முஸ்லிம்களுக்கு குவைத் அரசு மற்றும் குவைத் நாட்டு பரோபகாரிகள் வழங்கி வரும் மனிதாபிமான உதவிகள் உட்பட இன்னோரன்ன நடவடிக்கைகளுக்கு இலங்கை முஸ்லிம்கள் மற்றும் இலங்கை மக்கள் சார்பாக உதவித் தூதுவரிடம் ஷெய்க் நூருல்லாஹ் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.