எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்யாமல், டெலிகிராஃபிக் டிரான்ஸ்ஃபர் (TT) மூலம் வெளிநாட்டு கணக்குகளுக்கு 24.8 பில்லியன் ரூபாய் பெறுமதியான அமெரிக்க டொலர்களை மாற்றியதாகக் கூறப்படும் சந்தேகநபர், கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் ஒக்டோபர் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, மின்னணு பணப் பரிமாற்றங்கள் ஊடாக 24.85 பில்லியன் ரூபாய் பெறுமதியான டொலர் இருப்புகளை நாட்டிற்கு வெளியே அனுப்ப உதவி புரிந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் நபரொருவர் கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட 89 நிறுவனங்கள், பொருட்களை இறக்குமதி செய்வதாகக் காண்பித்து, மின்னணு பணப் பரிமாற்றங்கள் மூலம் டொலர் இருப்புகளை நாட்டிற்கு வெளியே அனுப்பியுள்ளதாக பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அதற்கமைய, 22.09.2026மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த நிறுவனங்களில் 05 நிறுவனங்கள் மூலம் போலி ஆவணங்களைத் தயாரித்து 24.85 பில்லியன் ரூபாய் பெறுமதியான டொலர் இருப்புகளை நாட்டிற்கு வெளியே அனுப்ப உதவி புரிந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் டாம் வீதி , கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரொருவர் வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
2024 டிசம்பர் முதல் 2025 நவம்பர் வரையிலான காலப்பகுதியில், எந்தவொரு பொருட்களையும் இறக்குமதி செய்யாமல், டெலிகிராஃபிக் டிரான்ஸ்ஃபர் (TT) முறைமையின் மூலம் இந்த டொலர்கள் வெளிநாட்டு கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.








