ஸ்பெயினில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளான பழமைவாத மக்கள் கட்சியும் (PP), தீவிர வலதுசாரியான வொக்ஸ் (Vox) கட்சியும் இணைந்து பெரும்பான்மையைப் பெறக்கூடும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம், பிரான்சிஸ்கோ பிராங்கோவின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்து சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர், ஸ்பெயினின் தேசிய அரசாங்கத்தில் தீவிர வலதுசாரிகள் அங்கம் வகிப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
வீட்டு வசதி மற்றும் குடியேற்றம் தொடர்பான விவகாரங்களை மையமாகக் கொண்டு கடுமையான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இந்தத் திடீர் தேர்தல், கடந்த எட்டு ஆண்டுகால சோசலிச பிரதமர் பெட்ரோ சான்செஸின் ஆட்சியை இரு முற்றிலும் மாறுபட்ட கோணங்களில் மதிப்பிடும் தேர்தலாக அமைந்துள்ளது.
சான்செஸின் ஆதரவாளர்கள், ஐரோப்பாவில் பொருளாதார மந்தநிலை நிலவும் சூழலில் ஸ்பெயின் சமூக முன்னேற்றத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னுதாரணமாகத் திகழ்வதாகக் கூறுகின்றனர்.
எனினும், எதிர்க்கட்சிகளான பழமைவாதிகளும் தீவிர வலதுசாரிகளும் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் சந்தர்ப்பவாதம் நிறைந்த ஆட்சிக்கு முடிவுகட்டி, நாட்டில் அடிப்படை மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
இந்தத் தேர்தல் பெட்ரோ சான்செஸின் தலைமைத்துவத்திற்கு ஆதரவா அல்லது எதிர்ப்பா என்பதைத் தீர்மானிக்கும் வாக்கெடுப்பாகவே பார்க்கப்படுவதாக ஸ்பெயினின் அரசியல் மற்றும் அரசியலமைப்பு ஆய்வுகளுக்கான மையத்தின் அரசியல் விஞ்ஞானி அல்வாரோ சான்செஸ் கார்சியா தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியாகப் பிளவுபட்டுள்ள இத்தகைய தேர்தலில் கட்சி மாறி வாக்களிக்கும் வாக்காளர்கள் பெரும்பாலும் தங்களது தற்போதைய அரசியல் அணியிலேயே இருப்பார்கள் என்றும், இடதுசாரிகளிலிருந்து வலதுசாரிகளுக்கோ அல்லது அதற்கு மாறாகவோ வாக்களிப்பவர்கள் குறைவாகவே இருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக் கணிப்புகளின்படி, பழமைவாத மக்கள் கட்சி (PP) அதிக ஆசனங்களைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், 350 ஆசனங்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையில் ஆட்சியமைப்பதற்குத் தேவையான 176 ஆசனங்களைப் பெறுவதற்கு மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படும் தீவிர வலதுசாரி வொக்ஸ் கட்சியின் ஆதரவு அக்கட்சிக்குத் தேவைப்படும்.
பெரும்பாலான கருத்துக் கணிப்புகள், மக்கள் கட்சியும் வொக்ஸ் கட்சியும் இணைந்து பெரும்பான்மையைப் பெறும் எனத் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் கட்சியின் தலைவர் அல்பெர்டோ நூனெஸ் ஃபெய்ஹூ, கூட்டணி அரசாங்கம் அல்லது நாடாளுமன்றத்தில் வொக்ஸ் கட்சியின் ஆதரவுடன் சிறுபான்மை அரசாங்கம் அமைப்பதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
எனினும், தேர்தல் கணிப்புகள் சாதகமாக இல்லாதபோதும், வலதுசாரிகளின் எழுச்சியைத் தடுப்பதற்காக இடதுசாரி ஆதரவாளர்கள் பெருமளவில் வாக்களிப்பார்கள் என பிரதமர் சான்செஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டு தேர்தலில் அவரது சோசலிச தொழிலாளர் கட்சி (PSOE) இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்தாலும், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் கட்டலோனியா, பாஸ்க் பிராந்திய அரசியல் குழுக்களின் ஆதரவுடன் அவர் மீண்டும் ஆட்சியமைத்திருந்தார்.
“நாங்கள் தோல்வியடைவோம் என்பதை என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது” என வெள்ளிக்கிழமை வானொலி நேர்காணலில் தெரிவித்த அவர், மாட்ரிட்டில் நடைபெற்ற இறுதிப் பிரசாரக் கூட்டத்தில், “இந்தத் தேர்தல் ஒரே ஒரு விடயத்தைப் பற்றியது. ஸ்பெயின் முன்னோக்கிச் செல்கிறதா அல்லது பின்னோக்கிச் செல்கிறதா என்பதே அது” எனக் குறிப்பிட்டார்.
2018ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் சான்செஸ், ஸ்பெயின் இதுவரை இல்லாத அளவுக்கு சிறந்த நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐரோப்பிய ஆணைக்குழுவின் கணிப்பின்படி, இந்த ஆண்டில் ஸ்பெயினின் பொருளாதாரம் 2.6 சதவீதம் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, யூரோ வலயத்தின் பொருளாதார வளர்ச்சி 1.2 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் வலதுசாரி அரசியல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், ஐரோப்பாவின் முற்போக்குவாதிகளிடையே சான்செஸ் பிரபலமான தலைவராக உருவெடுத்துள்ளார்.
54 வயதான அவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் அடிக்கடி முரண்பட்டுள்ளதுடன், நேட்டோ உறுப்பு நாடுகள் கோரிய பாதுகாப்புச் செலவினத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக அதிகரிக்கும் திட்டத்தையும் நிராகரித்துள்ளார்.
மேலும், காஸாவில் இஸ்ரேல் முன்னெடுக்கும் போரை இனப்படுகொலை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
எனினும், உள்நாட்டில் அவரது ஆட்சிக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.
“வெளிநாடுகளில் அவர் ஒரு கதாநாயகனாகக் கருதப்படுகிறார். ஆனால், ஸ்பெயினில் அப்படியல்ல” என நீண்டகாலமாக மக்கள் கட்சிக்கு வாக்களித்து வரும் இசபெல் லபாயென் தெரிவித்துள்ளார்.
“வெளிநாடுகளில் நாம் பாராட்டப்படுகிறோம். ஆனால், இங்கு மக்களால் வீடுகளை வாங்க முடியவில்லை. உணவுப் பொருட்களைக் கூட வாங்குவதில் சிரமம் நிலவுகிறது. மருத்துவரைச் சந்திப்பதற்குக்கூட பல நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இது ஒரு பிரச்சினை” என 64 வயதான அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டு வசதி நெருக்கடியே இந்தத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
அதிகரித்து வரும் வீட்டு வாடகை மற்றும் வெளியேற்றங்களுக்கு எதிராக வாடகைதாரர்களைப் பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் முன்வைத்த இரண்டு யோசனைகளையும் நாடாளுமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, கடந்த ஒக்டோபர் மாதம் சான்செஸ் திடீர் தேர்தலை அறிவித்தார்.
சர்வதேச அரங்கில் சான்செஸ் பெற்றுள்ள அரசியல் செல்வாக்கு, ஸ்பெயின் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
“மொத்த உள்நாட்டு உற்பத்தியை உங்களால் உணவாக உண்ண முடியாது” என கடந்த வாரம் தொலைக்காட்சி விவாதத்தின்போது மக்கள் கட்சித் தலைவர் ஃபெய்ஹூ பிரதமரை விமர்சித்திருந்தார்.
பொருளாதாரக் குறியீடுகள் முன்னேற்றமடைந்துள்ள போதிலும், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வருகையே அந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்பட்டிருந்தாலும் சராசரி சம்பளத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்றும், 2018ஆம் ஆண்டு சோசலிசக் கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து வெளிநாட்டில் பிறந்த குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை நான்கு மில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளதால் பொதுச் சேவைகள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், சான்செஸின் நெருங்கிய அரசியல் வட்டாரத்தினர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்புடைய ஊழல் வழக்குகள் அவரது நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வட ஆபிரிக்கப் பகுதியில் அமைந்துள்ள ஸ்பெயினின் தன்னாட்சி நகரமான சியூட்டாவில் ஏற்பட்ட குடியேற்ற நெருக்கடியைக் கையாண்ட விதம் மற்றும் சில மாத இடைவெளியில் இடம்பெற்ற இரண்டு பாரிய ரயில் விபத்துகள் ஆகியவையும் அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்களை அதிகரித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, நாட்டின் நிர்வாகம் தோல்வியடைந்துள்ளதாகவும் அதனைச் சீரமைக்க வேண்டியுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
இந்தச் சூழல், அண்மைக்காலமாக வேகமாக வளர்ந்து வரும் அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள வொக்ஸ் கட்சிக்குச் சாதகமாக அமைந்துள்ளது.
ஸ்பெயின் பிரஜைகளுக்கு முன்னுரிமை வழங்கும் கொள்கையை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பெருமளவிலான குடியேற்றவாசிகளுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்குவதைத் தடைசெய்தல் உள்ளிட்ட வாக்குறுதிகளை முன்வைத்து வொக்ஸ் கட்சி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.
ஸ்பெயின் பிரஜைகளுக்கு சமூக நலன்களைப் பெறுவதில் அதிக முன்னுரிமை வழங்கும் வொக்ஸ் கட்சியின் திட்டம், சமூகத்தில் இரண்டு வகையான உரிமை நிலைகளை உருவாக்கக்கூடும் என விமர்சிக்கப்படுகிறது.
முக்கிய அரசியல் கட்சிகளில் அதிகளவிலான ஆசனங்களைப் புதிதாகக் கைப்பற்றும் கட்சியாக வொக்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023ஆம் ஆண்டு தேர்தலில் 350 ஆசனங்களில் 33 ஆசனங்களைப் பெற்றிருந்த அக்கட்சி, இம்முறை தனது பிரதிநிதித்துவத்தை இரட்டிப்பாக்கி, தேசிய அளவில் சுமார் 18 சதவீத வாக்குகளைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
“நேர்மையற்ற ஒரு தலைவரால் வழிநடத்தப்படும் குற்றவியல் கும்பலே தற்போது நாட்டை ஆட்சி செய்கிறது. பொய் கூறுவதில் அவருக்கு எந்த எல்லையும் கிடையாது” என வொக்ஸ் கட்சித் தலைவர் சான்டியாகோ அபாஸ்கல், வெள்ளிக்கிழமை வலென்சியாவில் நடைபெற்ற இறுதிப் பிரசாரக் கூட்டத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வொக்ஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசாங்கம் அமைப்பதற்குப் பதிலாக, நாடாளுமன்றத்தில் அக்கட்சியின் ஆதரவுடன் மக்கள் கட்சி தனித்து ஆட்சியமைப்பதையே விரும்புவதாக ஃபெய்ஹூ முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
எனினும், தேர்தல் முடிவுகளே இதனைத் தீர்மானிக்கும். தீவிர வலதுசாரி வொக்ஸ் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றினால், அரசாங்கம் அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அக்கட்சியின் செல்வாக்கும் பேரம்பேசும் வலிமையும் அதிகரிக்கும்.
ATREVIA நிறுவனத்தின் உலகளாவிய பொதுவிவகாரப் பணிப்பாளர் யோலண்டா ரோமன் தெரிவிக்கையில், 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், மக்கள் கட்சியும் வொக்ஸ் கட்சியும் இணைந்து கூட்டணி அரசாங்கம் அமைப்பதற்கான வாய்ப்பு தற்போது வாக்காளர்கள் மத்தியில் குறைவான அச்சத்தையே ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், தீவிர வலதுசாரிகள் ஆட்சிக்குள் நுழைவார்கள் என்ற எச்சரிக்கையை முன்வைத்து வாக்காளர்களைத் தமது பக்கம் ஈர்ப்பது சோசலிசக் கட்சிக்கு கடினமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“மக்களிடையே அச்சம் குறைந்துள்ளதை நான் காண்கிறேன். அல்லது இது நடக்கப்போகிறது என்ற எண்ணத்துடன் மக்கள் பழகிவிட்டார்களோ தெரியவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, அண்டலூசியா உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களில் மக்கள் கட்சியும் வொக்ஸ் கட்சியும் இணைந்து ஆட்சி நடத்தி வருகின்றன.
பிராந்திய அரசாங்கங்களை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளின்போது வொக்ஸ் கட்சி முன்வைத்த கோரிக்கைகளைக் கருத்திற்கொள்ளும்போது, ஞாயிற்றுக்கிழமை தேர்தலில் அக்கட்சி வலுவான வெற்றியைப் பெற்றால் முக்கிய அமைச்சுப் பொறுப்புகளையும் கோரக்கூடும் என அரசியல் விஞ்ஞானி அல்வாரோ சான்செஸ் கார்சியா தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மூடப்படும். அதன்பின்னர் உத்தியோகபூர்வமான தற்காலிக தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கும் என்பதுடன், நள்ளிரவுக்கு முன்னர் ஒட்டுமொத்த தேர்தல் நிலவரமும் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.







