இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின்போது மனிதாபிமான உதவிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்றும், பல தசாப்தங்களாகத் தொடரும் தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் (OHCHR) வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்த சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பிராந்திய பணிப்பாளர் ஸ்மிருதி சிங், இலங்கையில் சர்வதேச சட்டத்தின் கீழ் இடம்பெற்ற குற்றங்களைத் தீர்ப்பதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
நூறாயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவை இன்னமும் எட்டாக்கனியாகவே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு முடிவடைந்த உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்து, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் விருப்பமின்றிச் செயற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செம்மணியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின்போது சிறுவர்கள் உட்பட 583க்கும் மேற்பட்டோரின் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு மனிதப் புதைகுழிகள் தொடர்ந்தும் அடையாளம் காணப்பட்டு வருகின்ற போதிலும், குற்றவாளிகள் தண்டிக்கப்படாத நிலை நீடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் மோதல்களில் காணப்படும் இதேபோன்ற சம்பவங்களுக்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் அமைந்துள்ளதாக ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் ஸ்மிருதி சிங் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் பொறுப்புக்கூறல் இல்லாமையும், தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலை தொடர்வதும் ஏனைய நாடுகளில் சர்வதேச சட்டத்தை மீறி குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஊக்கமளிக்கக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இலங்கையில் நீதி, உண்மை மற்றும் இழப்பீடு தொடர்பான பிரச்சினைகள் பல தசாப்தங்களாகத் தீர்க்கப்படாமல் இருப்பதையும், ஐ.நா. அறிக்கையின் கண்டறிதல்களையும் கருத்திற்கொண்டு, சர்வதேச கண்காணிப்பு தொடர வேண்டியதன் அவசியத்தை சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தின் (OHCHR Sri Lanka Accountability Project) பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தையும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
உலகளாவிய அதிகார வரம்புக் கொள்கை (Universal Jurisdiction) உள்ளிட்ட வழிமுறைகள் ஊடாகப் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கு, இந்தத் திட்டத்தின் வளங்களைப் பயன்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் உறுப்பு நாடுகளையும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
‘I Died Many Times: Attacks on Humanitarian Assistance in Sri Lanka, 20 Years On’ எனப் பெயரிடப்பட்டுள்ள ஐ.நா. அறிக்கை, இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தின்போது மனிதாபிமானப் பணியாளர்கள் மற்றும் நடவடிக்கைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், அத்துடன் மோதலில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினராலும் மனிதாபிமான உதவிகள் கட்டுப்படுத்தப்பட்டமை மற்றும் மறுக்கப்பட்டமை தொடர்பில் ஆராய்கிறது.
இலங்கையில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய குற்றங்கள் குறித்த ஆதாரங்களைச் சேகரித்தல், ஒருங்கிணைத்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகிய பொறுப்புக்கூறல் பணிகளை முன்னெடுப்பதற்காக, 2021ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானத்தின் கீழ் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம் நிறுவப்பட்டது.







