இலங்கையின் உள்நாட்டு கித்துள் கைத்தொழிலை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘கித்துள் எக்ஸ்போ – 2026’ (KITHUL EXPO – 2026) உணவுக் கண்காட்சி இன்று (27) கொழும்பிலுள்ள சிங்கள கலாசார நிறுவகத்தின் (சுதர்ஷி மண்டபம்) வளாகத்தில் ஆரம்பமாகவுள்ளது.
மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியின் ஊடாக கித்துள் சார்ந்த உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், உள்ளூர் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் இக்கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோரை ஊக்குவித்தல் ஆகியவை நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளன.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் கித்துள் அபிவிருத்திச் சபையினால், அமைச்சர் சமந்த வித்யாரத்னவின் வழிகாட்டலின் கீழ் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்தக் கண்காட்சியில் கித்துள் பாணி, கித்துள் வெல்லம், கித்துள் மாவு உள்ளிட்ட பல்வேறு கித்துள் சார்ந்த உற்பத்திகளைப் பார்வையிடவும் சுவைத்துப் பார்க்கவும் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
அத்துடன், பெறுமதி சேர்க்கப்பட்ட கித்துள் உற்பத்திகள், கித்துள் சார்ந்த கைவினைப் பொருட்கள் ஆகியவையும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
மேலும், கித்துள் சார்ந்த உணவுகளைத் தயாரிக்கும் நேரடி செயல்விளக்கங்கள், உற்பத்திப் பொருட்களின் கண்காட்சிகள் மற்றும் உள்ளூர் தொழில்முனைவோருடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நவம்பர் 27 முதல் 29ஆம் திகதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியைப் பார்வையிடுமாறு ஏற்பாட்டாளர்கள் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.








