நாய்கள் மூலம் பரவும் வெறிநாய்க்கடி நோயினால் ஏற்படும் மனித உயிரிழப்புகளை 2030ஆம் ஆண்டுக்குள் முற்றாக ஒழிப்பதற்கான அடுத்த இலக்கு நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது.
நாய்கள் மூலம் பரவும் வெறிநாய்க்கடி நோயினால் மனித உயிரிழப்புகள் இல்லாத நிலையை பூட்டான் எட்டியதைத் தொடர்ந்து, இந்த இலக்கு இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பில் கடந்த வாரம் நடைபெற்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) உலகளாவிய வெறிநாய்க்கடி நோய் நிபுணர்கள் ஆலோசனைக் கூட்டத்தின்போது, பூட்டான் இந்த இலக்கை அடைவதற்கான அடையாளமாக இலங்கையிடம் பொறுப்பை ஒப்படைத்ததாக உலக சுகாதார ஸ்தாபனம் தனது உத்தியோகபூர்வ ‘X’ தளத்தில் தெரிவித்துள்ளது.
குறித்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, வெறிநாய்க்கடி நோயை ஒழிப்பதற்காக பூட்டான் முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்த அனுபவங்கள் பகிரப்பட்டுள்ளன.
இதில் பெருமளவிலான நாய்களுக்குத் தடுப்பூசி செலுத்துதல், நோய்த்தொற்றுக்குப் பின்னரான தடுப்பு சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துதல், ‘ஒரே சுகாதாரம்’ (One Health) கண்காணிப்பு முறையை வலுப்படுத்துதல் மற்றும் பல்வேறு துறைகளின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு ஆகியவை உள்ளடங்குகின்றன.
இதன்போது, பிராந்தியத்தில் வெறிநாய்க்கடி நோயை ஒழிக்கும் அடுத்த இலக்கு நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டதுடன், சுகாதார அமைச்சின் செயலாளர் இலங்கை சார்பில் அடையாளபூர்வமான பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் இலங்கை தனது இலக்கை அடைவதற்கு உதவும் பரிந்துரைகள் உள்ளடங்கிய 2025ஆம் ஆண்டுக்கான வெளிப்புறத் திட்ட மதிப்பாய்வு அறிக்கையும் இதன்போது கையளிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுத் தகவல்கள், பிராந்திய அனுபவங்கள் மற்றும் அரசியல் ரீதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைந்த ‘ஒரே சுகாதாரம்’ நடவடிக்கைகளாக மாற்றுவதே தற்போதைய முன்னுரிமை என உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் வெறிநாய்க்கடி நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், நாய்கள் மூலம் பரவும் இந்நோயினால் ஏற்படும் மனித உயிரிழப்புகளை பூச்சியமாக்குவதற்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் ஏனைய பங்காளிகளுடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் உறுதியளித்துள்ளது.







