இலங்கையில் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளையோர் மத்தியில் HIV தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிறைவடையும் போது, 15 முதல் 24 வயதுக்குட்பட்ட பிரிவில் 88 புதிய HIV தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 78 பேர் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் மாதவி குணரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2026ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிறைவடையும் போது 708 புதிய HIV தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
1987ஆம் ஆண்டு இலங்கையில் முதலாவது HIV தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட காலம் முதல், ஒவ்வொரு ஆண்டும் புதிய தொற்றாளர்களை நாம் அடையாளம் கண்டு வருகின்றோம்.
2026ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிறைவடையும் போது, நாட்டில் இதுவரை மொத்தமாக 8,111 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
2026ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளிலும் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட பிரிவில் 88 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் 78 பேர் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகளாவர்” எனத் தெரிவித்துள்ளார்.








