தாய்லாந்தில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட தாய்லாந்தின் பிரதி பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் புவாங்ட்கியோவ் (Sihasak Phuangketkeow) தனது விஜயத்தை நிறைவு செய்துள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து பிரதி பிரதமருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தையின்போது, வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தாய்லாந்தில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பு வாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பில் இரு தரப்பினரும் கவனம் செலுத்தியுள்ளனர்.
மேலும், உணவு பதப்படுத்துதல், இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள், விருந்தோம்பல் உள்ளிட்ட துறைகளில் தாய்லாந்து நிறுவனங்களுக்குள்ள நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளன.
இந்த விஜயத்தின்போது தாய்லாந்து பிரதி பிரதமர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது, வர்த்தகம், முதலீடு, விவசாயம், சுற்றுலாத்துறை, தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி (TVET) மற்றும் போக்குவரத்து இணைப்புகள் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விராகுலை 2027ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரியவுடனான சந்திப்பில், குறிப்பாக BIMSTEC அமைப்பின் ஊடாக இருதரப்பு மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், 2027 ஜனவரி மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள இலங்கை எக்ஸ்போ கண்காட்சியில் தாய்லாந்து வர்த்தகப் பிரதிநிதிகள் குழுவின் பங்கேற்பை உறுதிப்படுத்துவதற்கான அழைப்பையும் பிரதமர் விடுத்துள்ளார்.
இந்த விஜயத்தின் முக்கிய அம்சமாக, சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பயணங்களை இலகுபடுத்துவதுடன், சுற்றுலாத்துறை, மக்களுக்கிடையிலான பரிமாற்றங்கள் மற்றும் இருதரப்பு வர்த்தக வாய்ப்புகளை விரிவுபடுத்துவதும் இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
இதற்கிடையில், தாய்லாந்து மன்னரின் அரச பிரதிநிதியாக இலங்கைக்கு வருகை தந்த பிரதி பிரதமர், அஸ்கிரிய மகா விகாரையில் நடைபெற்ற ஸ்ரீ தலதா தொடர்பான ராஜகீய கட்டினா புண்ணிய நிகழ்விலும் கலந்துகொண்டுள்ளார்.
இந்த விஜயம் இலங்கை மற்றும் தாய்லாந்து இடையிலான நீண்டகால நட்புறவுக்கு புதிய உத்வேகத்தை வழங்குவதுடன், பொருளாதார ஒத்துழைப்பு, சுற்றுலா, முதலீடு மற்றும் இரு நாட்டு மக்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.








