யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றினால், வீதி எல்லைக்கோட்டிற்குள் மாநகர சபையின் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டிருந்த கட்டுமானங்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் அகற்றப்பட்டுள்ளன.
குறித்த உணவகம் அனுமதியின்றி கட்டுமானங்களை மேற்கொண்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவற்றை அகற்றுமாறு உத்தரவிட்டிருந்தது.
இதற்கமைய, நேற்று (25) பொலிஸாரின் முன்னிலையில், மாநகர பிரதம பொறியியலாளர் தலைமையிலான மாநகர சபை உத்தியோகத்தர்கள் குழுவினரால் குறித்த அனுமதியற்ற கட்டுமானங்கள் அகற்றப்பட்டன.
இந்நிலையில், அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றும் நடவடிக்கையின்போது, அவற்றுடன் இணைந்த வகையில் பிரதான வீதியின் மழைநீர் வழிந்தோடும் வடிகாலும் அத்துமீறி அடைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் மாநகர முதல்வர் வி. மதிவதனிக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இதனையடுத்து, குறித்த பகுதிக்கு நேரில் விஜயம் செய்த மாநகர முதல்வர் மதிவதனி, மழைநீர் ஓட்டத்தைத் தடை செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருந்த தடைகளை உடனடியாக அகற்றுமாறு பொதுச் சுகாதாரப் பொறியியல் பிரிவு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அனுமதியற்ற கட்டுமானங்கள் அகற்றப்படும் நடவடிக்கைகளையும் அவர் நேரில் பார்வையிட்டுள்ளார்.








