நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையைத் தொடர்ந்து, தெதுறு ஓயா மற்றும் தப்போவ நீர்த்தேக்கங்கள் உள்ளிட்ட பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நேற்று (25) இரவு தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் எட்டு வான் கதவுகளும் தலா இரண்டு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் வினாடிக்கு 11,200 கன அடி நீர் தெதுறு ஓயாவுக்கு வெளியேற்றப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, நீர்த்தேக்கத்திற்குக் கீழ்ப்பகுதியில் தெதுறு ஓயாவை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, விக்டோரியா நீர்த்தேக்கத்தின் எட்டு வான் கதவுகளும், தப்போவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும், லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அத்தனகலு ஓயாவின் நீர்மட்டமும் தூனமலே பகுதியில் உயர்வடைந்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.








