2026ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் (ஒக்டோபர் வரை) இலங்கையின் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி மூலம் கிடைத்த மொத்த வருமானம் 15.28 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 14.41 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்துடன் ஒப்பிடுகையில், இது 6.03 சதவீத வளர்ச்சியாகும்.
பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதித் துறைகளின் நேர்மறையான பங்களிப்பே இந்த வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய தரவுகளின்படி, பொருட்கள் ஏற்றுமதி வருமானம் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 11.36 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 5.72 சதவீதம் அதிகரித்து 12.01 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
ஏற்றுமதிப் போட்டித்தன்மையை மேம்படுத்துதல், புதிய சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், பொருட்கள் மற்றும் சேவைகளைப் பன்முகப்படுத்துதல் மற்றும் அதிக பெறுமதி கொண்ட வளர்ந்து வரும் ஏற்றுமதித் துறைகளை ஊக்குவித்தல் ஆகியவை இந்த வளர்ச்சிக்கான பிரதான காரணங்களாக அமைந்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மேலும் தெரிவித்துள்ளது.









