குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில், காஸாவுக்குள் தங்குமிடங்களை அமைப்பதற்கான பொருட்களைக் கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் கடுமையான சுகாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
காஸா மக்கள் மோசமான காலநிலையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு மிகக் குறைந்த வாய்ப்புகளையே கொண்டுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பெரும்பாலான மக்கள் காலநிலை மாற்றங்களிலிருந்து போதிய பாதுகாப்பை வழங்காத கூடாரங்களிலேயே தொடர்ந்தும் வசித்து வருகின்றனர். அதேவேளை, வேறு சிலர் இடிந்து விழும் அபாயத்தைக் கொண்ட சேதமடைந்த கட்டடங்களில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நீடித்த பாதுகாப்பை வழங்கக்கூடிய தங்குமிட வசதிகள் அவசியமாகியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தரையில் பணியாற்றும் தமது குழுவினர், காஸா மக்களை குளிர்காலத்திற்குத் தயார்படுத்துவதற்கான உதவிகளை வழங்கி வருகின்ற போதிலும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமான கட்டுமானப் பொருட்கள் தற்போது காஸாவில் இல்லை எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
நீடித்த வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைப்பதற்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், தமது மனிதாபிமானப் பணிகளுக்குப் பெரும் தடையாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக, காஸா மக்கள் குளிர்காலத்தை ஆரோக்கியத்துடனும் கண்ணியத்துடனும் எதிர்கொள்வதற்கான உதவிகளை வழங்குவது கடினமாகியுள்ளதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
காஸா மக்களுக்கு தற்காலிகத் தீர்வுகளை மாத்திரமன்றி, நீடித்த மற்றும் நிலையான தீர்வுகளே அவசியம் எனவும் அந்த அமைப்பு மேலும் வலியுறுத்தியுள்ளது.








