எதிர்வரும் பண்டிகைக் காலப்பகுதியில் போக்குவரத்துச் சோதனைகள் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தத் தீர்மானித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, போதைப்பொருள் பயன்படுத்தி விட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாகப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மதுபோதையில் வாகனம் செலுத்துதல் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு வாகனம் செலுத்துதல் ஆகிய குற்றங்களைத் தடுக்கும் வகையில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளன.
இதற்குத் தேவையான மதுபோதையைப் பரிசோதிக்கும் உபகரணங்கள் போதியளவில் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சாரதிகளை எழுமாறாகப் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தவும், வீதி விபத்துக்கள் இடம்பெற்ற பின்னர் சம்பந்தப்பட்ட சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்பதைப் பரிசோதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பண்டிகைக் காலத்தில் வீதி விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில் போக்குவரத்துச் சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதால், மதுபோதையிலோ அல்லது போதைப்பொருள் பயன்படுத்திய நிலையிலோ வாகனங்களைச் செலுத்துவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.







