பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான வீதி கீழ் கடுகன்னாவ பகுதியில் இன்று (23) இரவு 11 மணி முதல் நாளை (24) காலை 6 மணி வரை முழுமையாக மூடப்படவுள்ளது.
கீழ் கடுகன்னாவ பகுதியில் ஆபத்தான நிலையில் காணப்படும் பாறைகளைப் பாதுகாப்பாக அகற்றுதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பராமரிப்புப் பணிகளை முன்னெடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர செயற்பாட்டு மையம் ஊடாக சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
எனவே, குறித்த நேரத்தில் கொழும்பு – கண்டி பிரதான வீதியைப் பயன்படுத்த எதிர்பார்க்கும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.








