இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் விசேட கூட்டமொன்று அண்மையில் (18) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவரும் அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
தற்போதைய மற்றும் எதிர்கால உலகத் தொழிற்சந்தையின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் இலங்கையின் தொழிலாளர் சட்டக் கட்டமைப்பைப் புதுப்பிக்கும் நோக்கில் இந்த மறுசீரமைப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்டு வரும் உத்தேச சட்ட மறுசீரமைப்புகள் தொடர்பில் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.
தற்போது நடைமுறையிலுள்ள பிரதான தொழிலாளர் சட்டங்களை மீளாய்வு செய்து, அவற்றை ஒருங்கிணைத்து புதிய சட்டக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதே இதன் நோக்கமென அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உத்தேச புதிய தொழிலாளர் சட்டக் கட்டமைப்பு நான்கு பிரதான துறைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது. தொழிலாளர் தரநிலைகள், தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, தொழில்துறை பிணக்குகள் மற்றும் உறவுகள், தொழிற்சங்க உரிமைகள் ஆகியன இதில் உள்ளடக்கப்படவுள்ளன.
இதற்கமைய, தொழில் ஒப்பந்தங்களுக்கான கட்டமைப்பு, வேலை நேரம், விடுமுறை, மேலதிக நேரம், மகப்பேற்றுப் பாதுகாப்பு மற்றும் தந்தைவழி விடுமுறை தொடர்பான ஏற்பாடுகளும் புதிய சட்டத்தில் உள்ளடக்கப்படவுள்ளன.
மேலும், வேலைத்தளங்களில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களைத் தடுப்பது, பகுதிநேர ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது, தொழில் ஒப்பந்தங்களை முறைப்படுத்துவது, ஊழியர்களுக்கான சமூகப் பாதுகாப்புப் பயன்களை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட விடயங்களும் இதில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
முன்மொழியப்பட்டுள்ள தொழிலாளர் தரநிலைகள் சட்டமூலத்தின் கீழ் இதுவரை தயாரிக்கப்பட்டுள்ள நான்கு அத்தியாயங்களும் பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினரின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக தொழில் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான labourmin.gov.lk இல் வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய தொழிலாளர் சட்டங்களைத் தயாரிக்கும் செயற்பாட்டில் தொழிற்சங்கங்கள், தொழில் வழங்குநர்கள் மற்றும் ஊழியர் பிரதிநிதிகள் உள்ளிட்ட தொடர்புடைய தரப்பினரின் கருத்துகளையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தக் கூட்டத்தில் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொழில் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.









