சவூதி அரேபியாவின் புனித நகரமான மக்காவுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என யெமனின் ஹூதி இராணுவப் பேச்சாளர் யஹ்யா சரீ தெரிவித்துள்ளார்.
மக்கா மாகாணத்திற்கு நேற்று (21) 20:40 GMT மணியளவில் சவூதி அரேபியா ஆபத்து எச்சரிக்கையை விடுத்து, சில நிமிடங்களிலேயே அதனை நீக்கியதைத் தொடர்ந்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தனது டெலிகிராம் (Telegram) தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கா மற்றும் அனைத்து இஸ்லாமிய புனிதத் தலங்களையும் யெமன் மக்கள் புனிதமாகக் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மக்கா பிராந்தியத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறுவதன் மூலம் சவூதி அரேபியா மிகப்பெரிய பொய்யைப் பரப்புவதாகவும், தமது இராணுவ நடவடிக்கைகள் சவூதி அரேபியாவின் எண்ணெய் கட்டமைப்புகள் மற்றும் இராணுவத் தளங்களை மட்டுமே இலக்கு வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் ஆதரவைப் பெற்றுள்ள ஹூதிகள், யெமனின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கத்திற்கு எதிராகப் போரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இஸ்லாத்தின் புனித நகரமான மக்காவைத் தாம் இலக்கு வைப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஹூதிகள் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றனர்.
எனினும், கடந்த சில மாதங்களாக மக்கா நகரை நோக்கி ஏவப்பட்டதாகக் கூறப்படும் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை சவூதி அரேபியா இடைமறித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் நிலவிய ஒப்பீட்டளவிலான அமைதிக்குப் பின்னர், கடந்த ஜூலை மாதம் ஹூதிகளுக்கும் யெமன் அரசாங்கத்திற்கு ஆதரவான படைகளுக்கும் இடையிலான மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.







