இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துகள் காரணமாக 2,414 பேர் உயிரிழந்துள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த நவம்பர் 15ஆம் திகதி வரை வீதி விபத்துகளால் 2,414 பேர் உயிரிழந்துள்ளதாக அக்குழுவின் இணைப்பாளர் வைத்தியர் ருவன் துஷார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது மேலும் தெரிவித்த அவர்,
இந்த ஆண்டில் நவம்பர் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வீதி விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2,414 ஆக அதிகரித்துள்ளது. இது மிகப்பெரிய எண்ணிக்கையாகும்.
மாதமொன்றுக்கு சுமார் 230 பேர் வீதி விபத்துகளால் உயிரிழக்கின்றனர். இந்த ஆண்டில் இன்னும் ஒன்றரை மாதங்கள் எஞ்சியுள்ள நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
இதுவரை பதிவான உயிரிழப்புகளில் 1,000க்கும் அதிகமானோர் மோட்டார் சைக்கிள் விபத்துகளால் உயிரிழந்துள்ளனர்.
அதேபோன்று, 800க்கும் அதிகமான பாதசாரிகளும் உயிரிழந்துள்ளனர். இந்த இரு பிரிவுகளையும் சேர்ந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2,000ஐக் கடந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








