அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வங்கிக் கணக்குகளைத் திறத்தல் மற்றும் பயனாளர்களின் தகவல்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று (17) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
அஸ்வெசும திட்டத்தின் கீழான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 15ஆம் திகதியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தகவல்கள் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய தகுதியான பயனாளர்களின் பெயர்ப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
இதற்கமைய, புதிய பயனாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, புதிய அஸ்வெசும பயனாளர்கள் நலன்புரி நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்காகப் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட சமூகப் பாதுகாப்பு நன்மைகள் கணக்கொன்றைத் திறக்க வேண்டும்.
இதற்கான பரிந்துரைக் கடிதங்களை 2026 நவம்பர் 17ஆம் திகதி முதல் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களின் நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவுகள் விநியோகிக்கவுள்ளன.
குறித்த வங்கிக் கணக்கு அரச வங்கி ஒன்றில் ஆரம்பிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
கணக்கைத் திறந்த பின்னர், பயனாளர்கள் மீண்டும் தமக்குரிய பிரதேச செயலகத்திற்குச் சென்று சமூகப் பாதுகாப்புத் தகவல் ஆவணத்தில் வங்கிக் கணக்கு விபரங்களைப் புதுப்பிப்பது கட்டாயமாகும்.
மேலும், நலன்புரி நன்மைகள் திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து பயனாளர்களும் தங்களது வங்கிக் கணக்கு விபரங்களைச் சரிபார்ப்பதற்கு அனுமதி வழங்கும் வகையிலான சத்தியக் கடிதமொன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
நலன்புரி நன்மைகள் சபை அல்லது சம்பந்தப்பட்ட பிரதேச செயலகம் அவசியம் எனக் கருதும் சந்தர்ப்பங்களில், பயனாளர்களின் வங்கிக் கணக்கு விபரங்களை உரிய வங்கிகளுடன் இணைந்து சரிபார்ப்பதற்கு இந்தச் சத்தியக் கடிதத்தின் மூலம் பயனாளர்கள் தமது விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும்.
இதற்கான சத்தியக் கடிதத்தின் மாதிரி வடிவத்தைச் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்தின் நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
எனினும், ஏற்கனவே செயற்பாட்டில் உள்ள அஸ்வெசும வங்கிக் கணக்கைக் கொண்டுள்ள பயனாளர்கள் புதிதாக வங்கிக் கணக்குகளைத் திறக்க வேண்டிய அவசியமில்லை.
இதேவேளை, புதிய பயனாளர்கள் மற்றும் இரண்டாம் கட்டப் பயனாளர்களுக்கான நவம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவை 2026 நவம்பர் 27ஆம் திகதி வழங்குவதற்கு நலன்புரி நன்மைகள் சபை எதிர்பார்த்துள்ளது.








