லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு நிறுவனம், உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை இன்று (13) நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 4,965 ரூபாவிலிருந்து 6,740 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேவேளை, 5 கிலோகிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 732 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 1,988 ரூபாவிலிருந்து 2,720 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் திரவ பெற்றோலிய எரிவாயுவின் (LPG) விலைகள் அதிகரித்துள்ளமையால், இலங்கைக்கு எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான செலவுகள் உயர்ந்துள்ளதாகவும், இதன் காரணமாகவே விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வர்த்தக நுகர்வோருக்கு தடையற்ற எரிவாயு விநியோகத்தைத் தொடர்ந்து பேணுவதற்கு நிறுவனம் உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எதிர்கால விலைத் திருத்தங்கள் சர்வதேச LPG சந்தை விலைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் எனவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எரிவாயுவின் கிடைக்கும் தன்மை மற்றும் மாவட்ட ரீதியான விலைகள் தொடர்பான தகவல்களுக்கு 1345 என்ற நிறுவனத்தின் அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்ள முடியும்.








