போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட சட்டவிரோதப் பணத்தைப் பயன்படுத்திக் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 55 இலட்சம் ரூபாய் பெறுமதியான டிப்பர் வாகனத்திற்கு 14 நாட்கள் முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உஸ்வெட்டகெய்யாவ பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய சட்டவிரோதப் பணத்தைப் பயன்படுத்தி, தனது மனைவியின் பெயரில் குறித்த டிப்பர் வாகனத்தைக் கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, பணச் சுத்திகரிப்புத் தடுப்புச் சட்டத்தின் கீழ், குறித்த வாகனத்தை விற்பனை செய்தல், உரிமையை மாற்றுதல் அல்லது வேறு வழிகளில் அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த முடக்க உத்தரவு நவம்பர் 13ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.
குறித்த வலையமைப்புடன் தொடர்புடைய ஏனைய சொத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு முன்னெடுத்து வருகின்றது.







