அப்ரா அன்சார்
2027ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுர குமார திஸாநாயக்க இன்று (12) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், உற்பத்திப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல், எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை விரிவுபடுத்துதல் ஆகியவற்றுக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார நிலைமை மற்றும் கடன் முகாமைத்துவம்
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் இலங்கையின் பொருளாதாரத்திற்கு கணிசமான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக அரசாங்கம் பல்வேறு துறைகளில் பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக 147 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டின் இறுதியில் நாட்டின் கடன் அளவு 95 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், 2022ஆம் ஆண்டில் அரசாங்க வருமானத்தில் 79.1 சதவீதம் கடன் வட்டிச் செலுத்துகைக்காகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், அது 2025ஆம் ஆண்டில் 45.9 சதவீதமாகவும், 2026 செப்டெம்பர் மாதத்தில் 39.6 சதவீதமாகவும் குறைந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆறாவது மீளாய்வின்படி, தற்போதைய பொருளாதாரப் போக்கு தொடருமானால் 2032ஆம் ஆண்டளவில் நாட்டின் பொதுக்கடன் 87 சதவீதமாகக் குறையக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2025ஆம் ஆண்டில் இலங்கையின் கடன் சேவைச் செலவு 3,707 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாகவும், 2026ஆம் ஆண்டில் அது 3,591 மில்லியன் டொலர்களாக இருக்கும் எனவும், 2027ஆம் ஆண்டில் 2,986 மில்லியன் டொலர்களாகக் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கையால் கடன் தவணைகளைச் செலுத்த முடியாது என்ற கருத்துக்களை அவர் நிராகரித்துள்ளார்.
அத்துடன், நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 7 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாகவும், புலம்பெயர் தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்கள் 9 பில்லியன் டொலர்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டில் எரிபொருள் இறக்குமதிக்காக 4,042 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்ட நிலையில், 2026 செப்டெம்பர் மாதத்திற்குள் அந்தச் செலவு 4,487 மில்லியன் டொலர்களை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்காக 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டதுடன், 2026ஆம் ஆண்டில் இதுவரை 1.5 பில்லியன் டொலர் பெறுமதியான கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வருடாந்தம் 7 சதவீதமாக உயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்கு எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நட்டம்
2008ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனிப்பட்ட பிரச்சினை ஒன்றின் காரணமாக எமிரேட்ஸ் நிறுவனத்துடனான கூட்டாண்மையை இரத்துச் செய்ததைத் தொடர்ந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இதுவரையில் 528 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தேசிய விமான சேவையின் கடனைக் குறைப்பதற்கான வழிமுறைகளை ஆராய அமைச்சரவையினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த முயற்சிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதலீடுகள் மற்றும் வர்த்தக மேம்பாடு
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக விசேட ஊக்குவிப்புத் திட்டமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
முதலீட்டாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம் சட்டமா அதிபரின் சட்ட அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், முதலீட்டு ஊக்குவிப்புச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக திறைசேரியின் 100 சதவீத பங்குரிமையைக் கொண்ட புதிய அரச நிறுவனமொன்று உருவாக்கப்படவுள்ளது.
அரச சொத்துக்களை முகாமைத்துவம் செய்வதற்கான புதிய சட்டமொன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்தியாவுடனான தற்போதைய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை விரிவுபடுத்துவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், சீனாவுடன் புதிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்றை ஏற்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கை – ஐரோப்பிய பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புத் திட்டத்திற்காக 3,430 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய ஒற்றை வர்த்தக சாளரக் கட்டமைப்பை (National Single Trade Window) உருவாக்குவதற்காக 1,990 மில்லியன் ரூபாவும், தேசிய ஒற்றை முதலீட்டு சாளரத்தை உருவாக்குவதற்காக 100 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஏற்றுமதியில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினரின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக துறைமுகங்களுக்கு இடையிலான வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக்கும் நடைமுறைகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
தொழிலாளர் சட்டங்கள் மற்றும் சுங்கத் திருத்தங்கள்
தொழிலாளர்களுக்கும் தொழில் வழங்குநர்களுக்கும் இடையிலான உறவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டக் கட்டமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சுங்கக் கட்டளைச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் 2027 மார்ச் மாதத்திற்குள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சூதாட்டத் துறையை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான நிபுணத்துவம் நாட்டில் போதியளவில் இல்லாத காரணத்தினால் வெளிநாட்டு நிபுணர்களின் உதவி பெறப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஒழுங்குமுறை விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சாரத் துறை
இலங்கையின் மொத்த நிறுவப்பட்ட மின்சார உற்பத்தித் திறனில் 62 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களைக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதத்தில் சராசரி மின்சார உற்பத்தியில் 71 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து பெறப்பட்டுள்ளதாகவும், செப்டெம்பர் மாதத்தில் ஒருநாளில் இது 80 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தேசிய மின்சாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், அண்மையில் ஏற்பட்டது போன்ற நாடளாவிய மின்தடைச் சம்பவங்களைத் தடுப்பதற்கும் 26.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் 30 மெகாவோட் திறன்கொண்ட மின்கல சேமிப்புக் கட்டமைப்பொன்று நிறுவப்படவுள்ளது.
மேலும், ஏரிகளில் மிதக்கும் சூரிய மின்சக்தி கட்டமைப்புகளை நிறுவி 500 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
வீடுகளில் கூரைமேல் பொருத்தப்படும் சூரிய மின்சக்திக் கட்டமைப்புகளுடன் மின்கல சேமிப்பு வசதிகளை நிறுவுவோருக்கு ஒரு கிலோவாட்டிற்கு 25,000 ரூபா வீதம், அதிகபட்சமாக 250,000 ரூபா நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
இதற்காக 3,500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் சூரிய மின்கலங்களுக்கு விதிக்கப்படும் 10 சதவீத துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரியும் நீக்கப்படவுள்ளது.
எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோகக் கட்டமைப்பு
நாட்டின் எரிபொருள் சேமிப்புத் திறனை 45 நாட்களுக்குப் போதுமான அளவிற்கு அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
முத்துராஜவெலையிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வரை விமான எரிபொருள் குழாயைக் கட்டமைப்பதற்கும், 92,000 மெட்ரிக் தொன் கொள்ளளவுடைய எரிபொருள் சேமிப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் 22.34 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
கொலன்னாவையிலிருந்து துறைமுகம் வரையிலான எரிபொருள் குழாய்த் திட்டத்திற்காக 16,332 மில்லியன் ரூபா பெறுமதியான கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்தத் திட்டம் நிறைவடைந்தால் எரிபொருளை இறக்கும் நேரம் 96 மணித்தியாலங்களிலிருந்து 48 மணித்தியாலங்களாகக் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான பணிகள் 18 மாதங்களுக்குள் நிறைவுசெய்யப்படவுள்ளன.
ஸ்மார்ட் மின்மானிகள்
180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் 300,000 நுகர்வோருக்கு இலவசமாக ஸ்மார்ட் மின்மானிகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
அத்துடன், லங்கா மின்சார நிறுவனத்தின் (LECO) கீழ் 120 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மானிகள் வழங்கப்படவுள்ளன.
டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு
நாட்டின் டிஜிட்டல் மாற்றத்திற்காக டிஜிட்டல் பொருளாதார அதிகாரசபை மற்றும் டிஜிட்டல் பொருளாதார சபையை நிறுவுவதற்கான சட்டமூலம் 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் வணிகங்கள் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக 10,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், டிஜிட்டல் பொருளாதாரச் சட்டமொன்றும் இணையப் பாதுகாப்பு அதிகாரசபையொன்றும் 2027ஆம் ஆண்டில் உருவாக்கப்படவுள்ளன.
அரசாங்கத்தின் பொதுச் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக திறைசேரியின் முழுமையான பங்குரிமையைக் கொண்ட GoVTech நிறுவனத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தரவுப் பாதுகாப்பு அதிகாரசபையும் செயற்படுத்தப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் திறன்களை மேம்படுத்துவதற்கும், பொறுப்பான செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும் விஜேராம மாவத்தையில் செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையமொன்று நிறுவப்படவுள்ளது.
மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு
மன்னார் படுகையின் நான்கு கடற்பகுதிகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்திக்கான கேள்விப்பத்திரங்களை இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகாரசபை கோரியுள்ளது.
இதற்கான கேள்விப்பத்திரங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2027 பெப்ரவரி 02 என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேள்விப்பத்திரங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னர் உரிய பகுதிகள் விரைவாக வழங்கப்பட்டு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கான இணைய வசதிகள்
நாட்டின் டிஜிட்டல் மாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாகத் தெரிவுசெய்யப்பட்ட 750,000 மாணவர்களுக்கு பிராட்பேண்ட் இணைய வசதிகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் அறிவை மேம்படுத்துவதற்காக 2026ஆம் ஆண்டில் இணைய வவுச்சர்கள் வழங்குவதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 2027ஆம் ஆண்டிலும் இதற்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், பாடசாலை சீருடைகளுக்கான துணி வழங்கும் சீன அரசாங்கத்தின் திட்டம் எதிர்வரும் ஆண்டுகளிலும் தொடரும் என இலங்கைக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் பயிற்சி மற்றும் பிரிவேனா மாணவர்களுக்கான கொடுப்பனவுகள்
தேசிய கல்வி நிறுவகத்தில் ஆசிரியர் பயிற்சியைப் பெறும் மாணவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு 2027 ஏப்ரல் மாதம் முதல் 10,500 ரூபாவிலிருந்து 20,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
பிரிவேனா நிறுவனங்களில் கல்வி பயிலும் பிக்குமார்களுக்கான தினசரிக் கொடுப்பனவு 5 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
அதேவேளை, ஏனைய மாணவர்களுக்கான தினசரிக் கொடுப்பனவு 5 ரூபாவிலிருந்து 25 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.
தகுதிபெற்ற அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு வருடாந்தம் ஒருமுறை வழங்கப்படும் கொடுப்பனவு 7,500 ரூபாவிலிருந்து 12,500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
சுங்கக் கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் கொள்கலன் பரிசோதனைத் திறனை அதிகரிப்பதற்காக நிலையான ஸ்கேனிங் இயந்திரங்கள் மற்றும் கொள்கலன் ஸ்கேனர்களைக் கொள்வனவு செய்ய 1,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரச் சவால்களை முகாமைத்துவம் செய்வதுடன், அடுத்த தலைமுறைக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதே 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பிரதான நோக்கம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.






