சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட இலங்கையர் அனோஜன் சிவராசாவின் விடுதலைக்காகத் தலையீடு செய்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அவரது குடும்பத்தினர் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, அனோஜன் சிவராசாவின் குடும்ப உறுப்பினர்கள் இன்று (12) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியைச் சந்தித்து தமது நன்றியை நேரில் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கைப் பிரஜைகளுக்காக எப்போதும் குரல் கொடுப்பதும் அவர்களின் நலனுக்காகச் செயற்படுவதும் தனது பொறுப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அனோஜன் சிவராசாவின் விடுதலைக்கு ஒத்துழைப்பு வழங்கிய சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும், இனம், மதம், அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் இதற்குப் பங்களித்த அனைவருக்கும் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அனோஜன் சிவராசா தற்போது நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக அவரது பெற்றோர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
மரண தண்டனையிலிருந்து தனது மகனை விடுவித்து, அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பதற்காக ஆரம்பம் முதலே ஜனாதிபதி தலையீடு செய்தமைக்கு அவரது தாயார் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாட் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
சட்ட உதவிகளை வழங்குவதற்காக சவூதி அரேபியாவுக்குச் சென்ற சட்டத்தரணிகள் மற்றும் தனது மகனின் விடுதலைக்காக ஆதரவு வழங்கிய அனைத்து இலங்கையர்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ்காந்த், அனோஜன் சிவராசாவின் விவகாரத்தில் தலையிடுவதாக தமது முதலாவது சந்திப்பின்போது ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியமைக்காக நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தக் காலப்பகுதியில், குறிப்பாக சவூதி அரேபியாவில் பங்களாதேஷ் தம்பதியினர் தூக்கிலிடப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அனோஜன் சிவராசாவின் பெற்றோர் கடுமையான உளவியல் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டுள்ளார்.








