அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் விசேட பொதுக்கூட்டம் கடந்த நவம்பர் 3ஆம் திகதி அதன் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தேசிய மட்டத்திலும் சமூக நலப் பணிகளை முன்னெடுத்து வரும் இச்சம்மேளனத்தின் எதிர்காலச் செயற்பாடுகளை விரிவுபடுத்துவது மற்றும் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பாக இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
கூட்டத்துக்குத் தலைமை வகித்த சம்மேளனத்தின் தேசியத் தலைவர் ஷாம் நவாஸ் உரையாற்றுகையில், தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்காக இளைஞர்கள் தயார்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், ஐக்கியத்துடனும் ஒற்றுமையுடனும் செயற்படக்கூடிய இளைஞர் சமூகத்தை உருவாக்குவது காலத்தின் தேவையாகும் எனத் தெரிவித்தார்.
மேலும், பெரும்பான்மைச் சமூகத்தினர் மத்தியில் நல்லெண்ணத்தையும் புரிந்துணர்வையும் வளர்த்து, சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், இதற்காக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள இளைஞர்களைத் தயார்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் நாட்டின் பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்த மாவட்டத் தலைவர்கள் கலந்துகொண்டதுடன், நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது பங்கேற்பாளர்கள் தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.
கூட்டத்தில் ஷாம் நவாஸ், நிஹால் பாரூக், அஹமட் பர்ஹான், நலீர் அஹமட், இல்ஹாம் மரிக்கார், முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ், சிரேஷ்ட ஊடகவியலாளர் என். எம். அமீன் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி என். எம். ஷஹீத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, சம்மேளனத்தின் எதிர்காலச் செயற்பாடுகளைத் திட்டமிடுவதற்கும் சமூக சேவைகளை தேசிய மட்டத்தில் விரிவுபடுத்துவதற்கும் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இதன் முதற்கட்டமாக, கொழும்பு, களுத்துறை, காலி, புத்தளம், கேகாலை, அனுராதபுரம் மற்றும் கம்பஹா ஆகிய ஏழு மாவட்டங்களில் இளைஞர்களுக்கான ஆளுமை விருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
அத்துடன், ஏனைய மாவட்டங்களின் இணைப்பாளர்களுடன் இணையவழி ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்தி, மாவட்ட மட்டச் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து சம்மேளனத்தின் பணிகளை மேலும் வலுப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது.
மேலும், சம்மேளனத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தை 2027ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இதனிடையே, இலங்கையில் பணியாற்றும் மௌலவிகள், கதீப்மார்கள் உள்ளிட்ட சமயப் பணியாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதற்காக முஸ்லிம் கலாசார அமைச்சு மற்றும் பைத்துல்மால் உள்ளிட்ட தொடர்புடைய அமைப்புகளுடன் கலந்துரையாடி, பொருத்தமான திட்டமொன்றை உருவாக்குவதற்கும் இணக்கம் காணப்பட்டது.
நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களுடனான நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் மேம்படுத்தும் நோக்கில், சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வை வளர்க்கும் நிகழ்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
அதேவேளை, மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் மக் கொன – இந்திரிலிகொட புகையிரதக் கடவுப் பாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
சம்மேளனத்தின் தலைவர் ஷாம் நவாஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விசேட பொதுக்கூட்டம், அமைப்பின் எதிர்காலச் செயற்பாடுகளைத் திட்டமிடுவதற்கும் சமூக நலப் பணிகளை தேசிய மட்டத்தில் விரிவுபடுத்துவதற்குமான முக்கிய நிகழ்வாக அமைந்தது.







