தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சியிலுள்ள பேருவளை நகர சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
நகர சபைத் தலைவர் மொஹமட் மாபாசிம் தலைமையில் இன்று (10) நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற மாதாந்தக் கூட்டத்தின்போது, வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது.
எனினும், வாக்கெடுப்பு நடைபெற்றபோது ஊடகங்கள் செய்தி சேகரிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னரே ஊடகவியலாளர்கள் சபை மண்டபத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று உறுப்பினர்கள் மாத்திரமே பேருவளை நகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இருப்பினும், ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஆறு உறுப்பினர்களின் ஆதரவுடன் தேசிய மக்கள் சக்தி பேருவளை நகர சபையின் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது.
அதேவேளை, சபையின் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுயாதீனக் குழுவிற்கு ஏழு உறுப்பினர் பதவிகள் கிடைத்திருந்தன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின்போது, இதுவரை தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்து வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். மற்றுமொரு உறுப்பினர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்த்துள்ளார்.
இதற்கமைய, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக ஏழு வாக்குகளும் எதிராக எட்டு வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், ஓர் உறுப்பினர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
இதனால், ஒரு மேலதிக வாக்கினால் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின்போது ஊடகங்களுக்கு செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில், சபை அமர்வு நிறைவடைந்த பின்னர் ஊடகவியலாளர்கள் நகர சபைத் தலைவரிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த தலைவர் மொஹமட் மாபாசிம், வாக்கெடுப்பின்போது தனிப்பட்ட விடயமொன்றைக் கலந்துரையாட வேண்டியிருந்தமையாலேயே ஊடகங்களுக்கு செய்தி சேகரிக்க அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.






