தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் நலனைக் கருத்திற்கொண்டு விசேட பஸ் போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
இன்று (06) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு இந்த விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஞ்சீவ கனகரத்ன தெரிவித்துள்ளார்.சாதாரண பஸ் சேவைகளுக்கு மேலதிகமாக, இன்றைய தினம் மாத்திரம் 70க்கும் மேற்பட்ட விசேட பஸ் சேவைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, வழக்கமான பஸ் அட்டவணைக்கு மேலதிகமாக இன்று 102 பஸ்களும், நாளை 74 பஸ்களும், ஞாயிற்றுக்கிழமை 46 பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
கடந்த காலங்களில் பதிவான பயணிகள் போக்குவரத்துத் தரவுகள் மற்றும் கண்டி வீதியில் நிலவும் ரயில் சேவைத் தடங்கல்கள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டே இந்த மேலதிக பஸ் சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
மேலும், தீபாவளிப் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் கொழும்புக்குத் திரும்புவதற்குத் தேவையான போக்குவரத்து வசதிகளும் முழுமையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடைசிப் பயணி வரையிலும் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அதன் தலைவர் சஞ்சீவ கனகரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.








