இலங்கையின் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி, பயிற்சித் துறையை நவீனமயப்படுத்தும் நோக்கில், ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் (ADB) இலங்கை அரசாங்கம் 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தகவலின்படி, இந்த ஒப்பந்தம் இன்று (06) கொழும்பிலுள்ள திறைசேரியில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பில் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் ஷனன் கோவ்லினும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இதற்கமைய, பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்ட நிதியளிப்பு முறையின் கீழ் வழங்கப்படும் இந்த 100 மில்லியன் டொலர் கடனானது, இடைநிலைக் கல்வி மட்டத்தில் திறன் மேம்பாட்டை வலுப்படுத்துதல், வேலைவாய்ப்பை இலக்காகக் கொண்ட பயிற்சிகளை விரிவுபடுத்துதல் மற்றும் தொழில்நுட்ப, தொழிற்கல்வி மற்றும் பயிற்சித் துறையில் (TVET) கைத்தொழில் மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்பை அதிகரித்தல் ஆகிய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.
2027ஆம் ஆண்டு முதல் 2031ஆம் ஆண்டு வரை இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன் கீழ், தற்போதுள்ள வாகனப் பொறியியல் பயிற்சி நிறுவனம், வாகனத் தொழில்நுட்பத்திற்கான சிறப்பு மையமாகத் தரமுயர்த்தப்படவுள்ளது. அத்துடன், ஒன்பது தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி நிலையங்கள் பிராந்திய பயிற்சி மையங்களாக மாற்றப்படவுள்ளன.
மேலும், தரமான தொழிற்கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், மேலும் 40 பயிற்சி நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படவுள்ளன.
தொழிலாளர் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப பயிற்சிகளை மாற்றியமைக்கும் வகையில், 200 தேசிய தொழில்சார் திறன் தரநிலைகள், பாடத்திட்டங்கள் மற்றும் கற்றல் வளங்கள் புதுப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள கைத்தொழில் துறைகள் மற்றும் தொழில்களுக்குப் புதிய பயிற்சிப் பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், பணியிட அடிப்படையிலான பயிற்சித் தரநிலைகள் மற்றும் தொழிற்கல்வி பயிற்றுவிப்பாளர்களுக்கான தொழில்சார் மேம்பாட்டுத் திட்டங்களும் வலுப்படுத்தப்படவுள்ளன.
தனியார் பயிற்சி வழங்குநர்கள் தமது சேவைகளை விரிவுபடுத்துவதை ஊக்குவிக்கும் நிதியளிப்புத் திட்டங்கள் உள்ளிட்ட கொள்கை, நிதி மற்றும் டிஜிட்டல் சீர்திருத்தங்களுக்கும் இந்த வேலைத்திட்டம் ஆதரவளிக்கவுள்ளது.
டிஜிட்டல் மாற்றத்தின் ஒரு பகுதியாக, மின்னியல் கற்றல் தளம் (E-learning Platform) மற்றும் தொழிலாளர் சந்தை, பாடசாலை முகாமைத்துவத் தகவல் கட்டமைப்புகளுடன் இணைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பயிற்சி முகாமைத்துவத் தகவல் கட்டமைப்பு (Training Management Information System) ஆகியன அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
மேலும், இடைநிலைக் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பாதைகளை வலுப்படுத்துவதுடன், தொழிற்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் தொடர்பில் மாணவர்கள் தெளிவான தீர்மானங்களை மேற்கொள்ள உதவும் வகையில் தொழில் வழிகாட்டல் சேவைகளும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.








