நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.சில தனியார் நிறுவனங்களால் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளே சில பகுதிகளில் எரிபொருள் வரிசைகள் உருவாகக் காரணம் என அந்தக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த நிலைமையைச் சீர்செய்வதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாகத் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை. தேவையான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதுடன், தொடர்ச்சியாக விநியோகிக்கப்பட்டும் வருகின்றது.
தனியார் நிறுவனங்கள் தமக்கு ஏற்படும் நட்டத்தைக் கருத்திற்கொண்டு சில பகுதிகளில் எரிபொருள் விநியோகத்தைக் குறைத்துள்ளமையே தற்போதைய நிலைமைக்குக் காரணமாகும்.
குறித்த பகுதிகளில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இல்லாதபோது, அங்கு வரிசைகள் உருவாகின்றன. இதுவே தற்போது பிரச்சினையாக மாறியுள்ளது.
இவ்வாறான நிலையில், செபெட்கோ (CEYPETCO) எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அருகில் இல்லாத 52 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செயலாளரின் தலைமையில் அனைத்து எரிபொருள் நிறுவனங்களையும் அழைத்து நடத்தப்பட்ட கலந்துரையாடலின்போது, குறித்த பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து எரிபொருள் விநியோகிப்பதாக அந்த நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.
தமக்கு ஏற்படும் நட்டம் காரணமாகவே சில நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தைக் குறைத்திருந்ததாகவும், இனிவரும் காலங்களில் தாம் விநியோகிக்கும் எரிபொருளில் குறித்த பகுதிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சில பிரதேசங்களில் தனியார் நிறுவனங்களின் எரிபொருள் விநியோகக் குறைபாடு காரணமாக சிறியளவிலான வரிசைகள் ஏற்படக்கூடும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா மேலும் தெரிவித்துள்ளார்.








