QS Quacquarelli Symonds வெளியிட்டுள்ள 2027ஆம் ஆண்டுக்கான ஆசியப் பல்கலைக்கழக தரவரிசையில், இலங்கையைச் சேர்ந்த 12 பல்கலைக்கழகங்களில் 8 பல்கலைக்கழகங்கள் தமது தரவரிசையில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.
குறித்த அறிக்கையின்படி, கொழும்புப் பல்கலைக்கழகம் 46 இடங்கள் பின்னடைந்து ஆசிய அளவில் 364ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.அதேவேளை, பேராதனைப் பல்கலைக்கழகம் 389ஆவது இடத்தையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் 398ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.
எனினும், இலங்கையின் இரண்டு பல்கலைக்கழகங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளன.மொறட்டுவைப் பல்கலைக்கழகம் 37 இடங்கள் முன்னேறி 517ஆவது இடத்தையும், களனிப் பல்கலைக்கழகம் 44 இடங்கள் முன்னேறி 687ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.
தரவரிசையில் பின்னடைவைச் சந்தித்த போதிலும், தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக ஆசியாவில் இலங்கையின் முதல்நிலைப் பல்கலைக்கழகமாக கொழும்புப் பல்கலைக்கழகம் தனது இடத்தைத் தக்கவைத்துள்ளது.
மேலும், வேலைவாய்ப்பு வழங்குநர்களின் நற்பெயர் (Employer Reputation) என்ற பிரிவில் ஆசியாவின் முதல் 200 பல்கலைக்கழகங்களுக்குள் இடம்பிடித்த ஒரே இலங்கைப் பல்கலைக்கழகமாக கொழும்புப் பல்கலைக்கழகம் விளங்குகிறது. இப்பிரிவில் அது 192ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
இவ்வாண்டுக்கான தரவரிசையில் சுமார் 200 புதிய கல்வி நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன், ஆசியப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டி அதிகரித்துள்ளமையும் இலங்கையின் பல்கலைக்கழகங்கள் பின்னடைவைச் சந்திக்கக் காரணமாக அமைந்துள்ளதாக QS Quacquarelli Symonds சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், பல்கலைக்கழகப் பட்டதாரிகள் தொடர்பில் வேலைவாய்ப்பு வழங்குநர்கள் கொண்டுள்ள மதிப்பீடுகளை அளவிடும் Employer Reputation குறிகாட்டியில் ஏற்பட்ட வீழ்ச்சியும் கொழும்புப் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களின் தரவரிசையைப் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி ஊழியர்களில் கலாநிதிப் பட்டம் பெற்றவர்களின் விகிதம், மாணவர் – விரிவுரையாளர் விகிதம் மற்றும் வேலைவாய்ப்பு வழங்குநர்களின் நற்பெயர் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்தத் தரவரிசை தீர்மானிக்கப்படுகிறது.
எனினும், பல்கலைக்கழகத்தின் தரவரிசையில் ஏற்படும் வீழ்ச்சி, அதன் கல்வித் தரம் குறைந்துள்ளதைக் கட்டாயமாகக் குறிக்காது என்றும், பிராந்திய ரீதியான போட்டியில் ஏற்படும் மாற்றங்களும் தரவரிசையைப் பாதிக்கக்கூடும் என்றும் QS Quacquarelli Symonds தெரிவித்துள்ளது.
முழுமையான அறிக்கை:
https://www.topuniversities.








