அமெரிக்க இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் வளர்ச்சி மந்தமடையக்கூடும் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் அமெரிக்கப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் சந்தை மதிப்பில் பல பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவின் அதிவேக வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதை மையமாகக் கொண்டு ஜனநாயகக் கட்சியினர் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்திருந்த நிலையில், அக்கட்சியின் வெற்றி தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகளில் கடும் சரிவை ஏற்படுத்தியுள்ளது.
டவ் ஜோன்ஸ் தரவுகளின்படி, தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ள நாஸ்டாக் கூட்டுப் பங்குச் சந்தைக் குறியீடு 5.5 சதவீதத்திற்கும் அதிகமான சரிவுடன் நிறைவடைந்துள்ளது.
இதன் காரணமாக, சந்தை மூலதனத்தில் சுமார் 2.5 டிரில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2025ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவான மிக மோசமான சரிவாக இது அமைந்துள்ளதுடன், ஏனைய முக்கிய அமெரிக்கப் பங்குச் சந்தைக் குறியீடுகளும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்காக நிறுவனங்கள் பெருமளவு நிதியைச் செலவிட்டு வரும் நிலையில், அந்த முதலீடுகள் எதிர்பார்த்த பலனைத் தருமா என்ற சந்தேகங்களும் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இத்தகைய கவலைகளுக்கு மத்தியிலேயே பங்குச் சந்தையில் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பல்வேறு தேர்தல் தொகுதிகளில் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியினர், தரவு மையங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அதிவேக விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகத் தேர்தல் பிரசாரங்களில் உறுதியளித்திருந்தனர்.
குறிப்பாக, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை இயக்குவதற்கு அத்தியாவசியமான தரவு மையங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல முன்மொழிவுகளும் நாடு முழுவதும் வாக்கெடுப்புக்காக முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தலில் அமெரிக்க செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டிலும் ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெற்றுள்ளதன் மூலம், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிகாரத்திற்கு அரசியல் ரீதியான கட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








