கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் உணவுகளின் தரம் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக QR குறியீட்டு முறைமையொன்றை அறிமுகப்படுத்த மாநகர சபையின் பொதுச் சுகாதாரத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, இத்திட்டம் தற்போது வெள்ளவத்தையிலிருந்து பம்பலப்பிட்டி வரையான பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த முறைமையை கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக கொழும்பு மாநகர மேயர் விராய் கெலி பல்தசார் தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த பகுதிகளிலுள்ள ஒவ்வொரு உணவகத்திலும் QR குறியீட்டைக் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதனை ஸ்கேன் செய்து, அதில் காணப்படும் படிவத்தைப் பூர்த்தி செய்வதன் மூலம் உணவுகளின் தரம் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.
முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் நேரடியாக சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கும் சென்றடையும். அவர்கள் முறைப்பாடுகள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முறைப்பாடு செய்பவரின் அடையாளம் வெளிப்படுத்தப்படாமல் பாதுகாக்கப்படும் என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
முறைப்பாட்டை முன்வைத்த பின்னர், குறித்த உணவை உணவகத்திற்குத் திருப்பி ஒப்படைக்க வேண்டாம் என்றும், அதற்கான கட்டணப் பற்றுச்சீட்டை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறும் மாநகர சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.








