ஜோர்தானின் அம்மானில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்திற்கு வெளியே இடம்பெற்ற தாக்குதலில் ஜோர்தானிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பயங்கரவாதச் செயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று வியாழக்கிழமை (05) நண்பகல் 12.20 மணியளவில் தூதரகக் கட்டடத்திற்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு அதிகாரி மீது கூர்மையான ஆயுதத்துடன் வந்த நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதன்போது, தனது உத்தியோகபூர்வ கடமையை நிறைவேற்றிக் கொண்டிருந்த கோப்ரல் ஜவாத் அலி கலஃப் அல்-சலைத்தா (Jawad Ali Khalaf Al-Salaita) உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துக்குப் பதிலளித்த பொலிஸ் அதிகாரிகள், தாக்குதலாளியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து கைது செய்துள்ளதாக ஜோர்தானின் பொதுப் பாதுகாப்புப் பணிப்பகம் (PSD) தெரிவித்துள்ளது.
தாக்குதலாளியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின்போது, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸ் ரோந்துப் பிரிவின் பொறுப்பதிகாரி முகத்தில் காயமடைந்துள்ளார். அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது நிலைமை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, பாதுகாப்புப் பணியாளர்களை இலக்கு வைத்து தாக்குதலாளி திட்டமிட்டிருந்ததாக ஜோர்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இச்சம்பவம் பயங்கரவாதச் செயலாக உத்தியோகபூர்வமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அசோசியேட்டட் பிரஸ் (AP) செய்தி நிறுவனத்தின்படி, உயிரிழந்த அதிகாரியின் ஆயுதத்தைப் பறிக்க தாக்குதலாளி முயற்சித்ததாகவும், இதன்போது மற்றொரு அதிகாரி தலையிட்டு அதனைத் தடுத்ததாகவும் ஜோர்தானிய அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தல்
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகப் பணியாளர்கள் மற்றும் இலங்கைச் சமூகத்தினர் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அம்மானிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிக்கையொன்றின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
உயிரிழந்த பாதுகாப்பு அதிகாரியின் குடும்பத்தினருக்கும் சக ஊழியர்களுக்கும் தூதரகம் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளது.
ஜோர்தானுக்கான இலங்கைத் தூதுவர் விஷ்வநாத் அபொன்சு (Wishwanath Aponsu) மற்றும் தூதரக அதிகாரிகள், ஜோர்தானிய அதிகாரிகளுடன் இணைந்து அந்நாட்டின் பாதுகாப்பு நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இத்தாக்குதல் தொடர்பான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








