இணையப் பயன்பாட்டைத் தடை செய்வதை விட, பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்குவதே இன்றைய அவசியம்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பதின்ம வயதினரின் சமூக ஊடகப் பயன்பாடு தொடர்பில் பல்வேறு விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக, சமூக ஊடகங்களிலிருந்து சிறுவர்களை முற்றாக விலக்கி வைப்பதே அவர்களின் பாதுகாப்பையும் மனநலனையும் உறுதிப்படுத்துவதற்கான சிறந்த வழி என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகிறது.
எனினும், இணையத்திற்கும் நிஜ வாழ்க்கைக்கும் இடையிலான எல்லைகள் மங்கிவரும் தற்போதைய சூழலில், பதின்ம வயதினர் தங்களின் நட்பு, ஆர்வம், கற்றல் மற்றும் மனநலம் சார்ந்த கலந்துரையாடல்களுக்காகவும் இணையத்தைச் சார்ந்துள்ளனர்.
எனவே, இளைஞர்கள் இணையத்தைப் பயன்படுத்த வேண்டுமா என்பதை விட, அவர்களுக்குப் பாதுகாப்பான இணையச் சூழலை எவ்வாறு உருவாக்குவது என்பதே முக்கியமான கேள்வியாக மாறியுள்ளது.
2026 ஆம் ஆண்டின் உலக மனநல தினத்தை முன்னிட்டு, உலக சுகாதார ஸ்தாபனம் (WHO), ‘வாழும் அனுபவங்களுக்குச் செவிமடுத்தல்: நிஜமான குரல்கள், நிஜமான மாற்றம்’ (Lived experiences heard: real voices, real change) என்ற கருப்பொருளை முன்வைத்துள்ளது.
மக்களின் கருத்துக்களைக் கேட்பதுடன் நின்றுவிடாமல், அவர்களின் நேரடி அனுபவங்களின் அடிப்படையில் முடிவுகளையும் கட்டமைப்புகளையும் உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்தக் கருப்பொருள் வலியுறுத்துகிறது.
இதே அணுகுமுறை இளைஞர்களுக்கும் தொழில்நுட்பத் துறைக்கும் பொருந்தும். டிஜிட்டல் பாதுகாப்பு என்பது பதின்ம வயதினருக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பது மட்டுமல்ல. மாறாக, அவர்களுக்குப் பொருத்தமான சுதந்திரம், பாதுகாப்பு அம்சங்கள், நம்பிக்கையான பெரியவர்களின் வழிகாட்டல் மற்றும் இணைய ஆபத்துகளை அடையாளம் காணும் திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பான சூழலை உருவாக்குவதாகும்.
பெற்றோர்கள் தங்களின் வளரிளம் பருவ அனுபவங்களுடன் இன்றைய தலைமுறையினரின் வாழ்க்கை முறையை ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தொழில்நுட்பத்தை எதிர்ப்பதற்குப் பதிலாக, விழிப்புணர்வின் ஊடாக அதனைப் பொறுப்புடன் பயன்படுத்துவதற்கு குழந்தைகளை வழிநடத்த வேண்டும்.
அத்துடன், மின்னணு சாதனங்களின் பயன்பாடு குழந்தைகளின் தூக்கம், கல்வி மற்றும் குடும்ப உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பதையும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். பயத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டுப்பாடுகளை விதிப்பதற்குப் பதிலாக, பொறுப்பான டிஜிட்டல் பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பது அவசியமாகும்.
இந்த விடயத்தில் TikTok போன்ற சமூக ஊடகத் தளங்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. 18 வயதிற்குட்பட்ட பயனர்களுக்கான இயல்புநிலைக் கணக்கு அமைப்புகள், திரைப் பயன்பாட்டு நேரக் கட்டுப்பாடுகள், நேரடிச் செய்திகளுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் பொருத்தமற்ற உள்ளடக்கங்களை வடிகட்டும் வசதிகள் போன்றவை இதற்கான உதாரணங்களாகும்.
இத்தகைய பாதுகாப்பு அம்சங்கள், சிறுவர்களின் அறியாமையால் ஏற்படக்கூடிய இணைய ஆபத்துகளைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
எனினும், பாதுகாப்பு என்பது கட்டுப்பாடுகளால் மாத்திரம் சாத்தியமாகாது. பதின்ம வயதினர் புதிய விடயங்களை ஆர்வத்துடன் முயற்சித்துப் பார்க்கும் இயல்புடையவர்கள் என்பதால், தவறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
எனவே, இயல்புநிலைப் பாதுகாப்பு அம்சங்களுடன் பெற்றோரின் வழிகாட்டல் மற்றும் கண்காணிப்பு வசதிகளும் அவசியமாகும். அதேவேளை, பதின்ம வயதினர் தங்களுக்குப் பொருத்தமான உள்ளடக்கங்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும்.
சமூக ஊடகத் தளங்கள், பெற்றோர் மற்றும் பதின்ம வயதினர் ஆகிய மூன்று தரப்பினரும் இணைந்து செயல்படும் பாதுகாப்பு அணுகுமுறையே இதற்குத் தீர்வாக அமையும்.
மேலும், இணையத்தில் செலவிடும் நேரத்தை மாத்திரம் கணக்கிடுவதை விட, அங்கு கிடைக்கும் அனுபவங்களின் தரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக, இரவு நேரங்களில் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர் இணையப் பயன்பாட்டிலிருந்து இடைவேளை எடுப்பதற்கான நினைவூட்டல்கள் மற்றும் வழிகாட்டப்பட்ட தியானப் பயிற்சிகள் போன்ற அம்சங்கள் பயனர்களின் மனநல விழிப்புணர்வை மேம்படுத்த உதவக்கூடும்.
இவை மனநலச் சிகிச்சைக்கு மாற்றாக அமையாவிட்டாலும், பயனர்களின் நலனில் சமூக ஊடகத் தளங்கள் கொண்டிருக்க வேண்டிய பொறுப்பை எடுத்துக்காட்டுகின்றன.
மிக முக்கியமாக, இளைஞர்களின் பங்களிப்பு இல்லாமல் அவர்களுக்கான பாதுகாப்பான இணையச் சூழலை உருவாக்க முடியாது. பெரியவர்களும் தொழில்நுட்ப நிறுவனங்களும் இணைய ஆபத்துகளை அடையாளம் காண முடிந்தாலும், பதின்ம வயதினர் எதிர்கொள்ளும் சமூக அழுத்தங்கள் மற்றும் இணையச் சவால்களின் உண்மையான தன்மையை அவர்களது அனுபவங்களின் ஊடாகவே சிறப்பாகப் புரிந்துகொள்ள முடியும்.
எனவே, இளைஞர்களை வெறுமனே பாதுகாப்புக் கொள்கைகளின் இலக்குகளாகக் கருதாமல், பாதுகாப்பான டிஜிட்டல் தளங்களை வடிவமைப்பதில் பங்காளர்களாக இணைத்துக்கொள்ள வேண்டும்.
இணையத்தில் ஆபத்துகள் முற்றாக இல்லாத சூழலை உருவாக்குவது சாத்தியமற்றதாக இருக்கலாம். இருப்பினும், அதற்காக எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காமல் இருக்க முடியாது.
பாதுகாப்பு என்பது இளைஞர்களை உலகத்திலிருந்து தனிமைப்படுத்தும் சுவராக அமையாமல், இணைய உலகை நம்பிக்கையுடனும் பொறுப்புடனும் எதிர்கொள்ள உதவும் பாதுகாப்பு அரணாக அமைய வேண்டும்.
இளைஞர்களை இணையத்திலிருந்து எவ்வாறு விலக்கி வைப்பது என்பதை விட, இணையத்தில் இருக்கும் அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை எவ்வாறு உருவாக்குவது என்பதே இன்றைய சமூகத்தின் முக்கியமான பொறுப்பாகும்.
இக்கட்டுரையை ஆலோசகர் உளவியலாளரும் விரிவுரையாளருமான டாக்டர் அவந்தி ஜயசிங்க எழுதியுள்ளார்.








