அப்ரா அன்சார்
பிரான்ஸில் பல நாட்களாகத் தொடரும் வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அந்நாட்டு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் கட்டுப்பாடற்ற வன்முறைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு நகரங்களில் இடம்பெற்ற வன்முறைகளில் அரச கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், நூற்றுக்கணக்கான கடைகள் சேதப்படுத்தப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளன. இதுவரை குறைந்தது 2,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி வாயிலான உரையொன்றில் கருத்துத் தெரிவித்த மக்ரோன், பிரான்ஸ் மக்கள் தமது சொந்த நாட்டிற்கு எதிராக இவ்வாறான செயல்களில் எவ்வாறு ஈடுபட முடியும் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
வன்முறையை எதுவும் நியாயப்படுத்த முடியாது எனத் தெரிவித்த அவர், அவசியம் ஏற்படும் பட்சத்தில் குறிப்பிட்ட சில வீதிக் கூட்டங்களுக்குத் தடை விதிக்க உள்ளூர் அரச அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் கல்வித்துறை சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் போராடுபவர்களையும், கட்டடங்களைச் சேதப்படுத்தி கொள்ளையிடுபவர்களையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், தீவிர இடதுசாரிக் குழுக்களும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களும் வன்முறைகளில் இணைந்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
உள்துறை அமைச்சருக்கு பதவி விலக அழுத்தம்
வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டிய இடதுசாரி மற்றும் வலதுசாரி அரசியல்வாதிகள், உள்துறை அமைச்சர் லோரான் நுனேஸ் பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சனிக்கிழமை இடம்பெற்ற வன்முறைகளின்போது அரச கட்டடங்கள் முற்றுகையிடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டதுடன், பேருந்து நிறுத்தங்கள் சேதப்படுத்தப்பட்டு, வீதிகள் மறிக்கப்பட்டு, கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டன.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை உள்துறை அமைச்சர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்ததாக எலிசே மாளிகை தெரிவித்துள்ளது.
எனினும், பாதுகாப்புப் படைகளுக்குத் தொடர்ச்சியான தலைமைத்துவம் அவசியம் என்பதைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி அந்தப் பதவி விலகலை நிராகரித்துள்ளார்.
மேலும், வன்முறைகளுக்கு வழிவகுத்த பாதுகாப்புத் திட்டமிடல் மற்றும் உளவுத்துறைத் தகவல் சேகரிப்பில் ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பில் வெளிப்படையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், பாதுகாப்புப் படைகளின் செயற்பாட்டு முறைகளை மாற்றியமைக்குமாறும் உள்துறை அமைச்சருக்கு மக்ரோன் உத்தரவிட்டுள்ளார்.
பாரிஸில் மீண்டும் மோதல்கள்
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பாரிஸின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பிளாஸ் த லா ரெப்புப்ளிக் பகுதியில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
மின்சார மிதிவண்டிகள் ஒன்றாகக் குவிக்கப்பட்டு தீ வைக்கப்பட்டதுடன், பொலிஸார் மீது போத்தல்கள் மற்றும் கற்கள் வீசப்பட்டுள்ளன. வீதிகளில் இருந்த குப்பைத் தொட்டிகளுக்கும் தீ வைக்கப்பட்டதால் பெருமளவிலான புகை வெளியேறியுள்ளது.
இதற்குப் பதிலடியாக பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் அதிர்ச்சிக் குண்டுகளையும் பயன்படுத்தியுள்ளனர்.
பாரிஸில் மாத்திரம் இதுவரை 855 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எரிந்த நிலையில் காணப்பட்ட தடுப்புகள், சேதமடைந்த கடைகளின் கண்ணாடிகள் மற்றும் தீக்கிரையான வாகனங்களின் எச்சங்கள் வீதிகளில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதிப் போராட்டங்களுக்குள் ஊடுருவிய வன்முறைக் குழுக்கள்
சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவங்களின்போது, பல்லாயிரக்கணக்கான மக்கள் கல்வித்துறையின் மேம்பாடு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பாடசாலைகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், சேதமடைந்த பாடசாலைகளைப் புனரமைத்தல் மற்றும் பொதுச் சேவைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டங்களில் பங்கேற்றனர்.
எனினும், இந்த அமைதிப் போராட்டங்களுக்கு அப்பால், பாரிஸ், போர்டோ, நைஸ் மற்றும் மார்செய் உள்ளிட்ட நகரங்களில் சில குழுக்கள் திடீர் ஒன்றுகூடல்கள், வீதித் தடைகள் மற்றும் தீவைப்புச் சம்பவங்களில் ஈடுபட்டதுடன், பொலிஸாருடனும் மோதலில் ஈடுபட்டுள்ளன.
இந்தக் குழப்பமான சூழலைப் பயன்படுத்தி முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கடைகளை உடைத்து பொருட்களைக் கொள்ளையிட்டுள்ளனர்.
அரசின் தோல்வி எனக் குற்றச்சாட்டு
மத்திய பிரான்ஸின் லிமோஜஸ் நகரில் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நகர மண்டபம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த நகர மேயர் குய்லோம் குரின், கட்டடத்திற்குள் புகுந்து தீ வைத்தவர்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் போராட்டக்காரர்கள் அல்லர் என்றும், அவர்கள் திட்டமிட்ட வன்முறையில் ஈடுபட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், நகர மண்டபத்தைப் பாதுகாத்த ஊழியர் ஒருவர் கொலை மிரட்டலுக்கு உள்ளானதாகவும், தெரிவுசெய்யப்பட்ட அரச அதிகாரிகள் அச்சுறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டிய அவர், கலவரங்களைக் கட்டுப்படுத்துவதற்கான வெடிமருந்துகள் தீர்ந்துபோனதால் நகரப் பொலிஸாரால் வன்முறையாளர்களை எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை அரசின் மிகப்பெரிய தோல்வி எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
பிரான்ஸில் நிலவும் இந்த நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் அவசர ஆலோசனைகளை முன்னெடுத்து வரும் நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அணுகுமுறை தொடர்பில் தொடர்ந்து அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.
பிரான்ஸில் இடம்பெற்ற போராட்டங்களுக்கு இணையாக ஸ்பெயின், இத்தாலி மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகளிலும் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.









