அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் ரோ கன்னா, ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருதல், இஸ்ரேலுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்துதல் மற்றும் எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளை வெளியிடுதல் உள்ளிட்ட மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி தோல்வியடைந்தமைக்கான காரணங்களில் ஈரான் போரும், எப்ஸ்டீன் விவகாரத்தை மறைப்பதன் மூலம் வெளிப்பட்ட ஊழலும் அடங்குவதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், எக்ஸ் (X) சமூக ஊடகத்தில் பதிவிட்ட ரோ கன்னா, வான்ஸின் கருத்துடன் தாம் உடன்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈரானில் அமெரிக்க இராணுவத்தின் எந்தவொரு தாக்குதல் நடவடிக்கைக்கும் நிதியளிப்பதைத் தடுக்கும் இடைக்காலத் தீர்மானமொன்றுக்கு ட்ரம்ப் நிர்வாகம் ஆதரவளிக்க வேண்டும் என்றும், வியட்நாம் போருக்கு முற்றுப்புள்ளி வைத்ததைப் போன்று ஈரான் போரும் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இஸ்ரேலுக்கான அனைத்து அமெரிக்க உதவிகளையும் நிறுத்துவதற்கும் நிர்வாகம் ஆதரவளிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இதற்கு மேலதிகமாக, சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்த மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மாநில சட்டமா அதிபர்கள் வழக்குத் தொடர அனுமதிக்கும் வகையில், ‘Epstein 2.0 Act’ சட்டமூலத்திற்கும் ஆதரவளிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, இந்த மூன்று கோரிக்கைகளில் ஏதேனும் ஒன்றையாவது உண்மையில் நிறைவேற்றுவதற்கு ட்ரம்ப் நிர்வாகம் முன்வருமா எனத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸிடம் ரோ கன்னா கேள்வி எழுப்பியுள்ளார்.







