அப்ரா அன்சார்
அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்கள் வாக்களிக்கத் தயாராகியுள்ள நிலையில், பல மாநிலங்களில் வாக்குப்பதிவு ஆரம்பமாகியுள்ளது.
இதுவரை நேரடியாகவும் தபால் மூலமாகவும் நடைபெற்ற முன்கூட்டிய வாக்களிப்பில் 5.8 கோடிக்கும் அதிகமான மக்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.நியூயோர்க், கனெக்டிகட், நியூ ஜெர்சி, விர்ஜீனியா மற்றும் இந்தியானா, கென்டக்கி மாநிலங்களின் சில பகுதிகளில் உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு (கிரீன்விச் சராசரி நேரம் 11.00) வாக்குப்பதிவு ஆரம்பமானது.
அமெரிக்காவின் ஏனைய பகுதிகளில் வெவ்வேறு நேரங்களில் வாக்குப்பதிவு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இன்றைய மாலை முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், சில மாநிலங்களில் புதன்கிழமை அல்லது அதற்குப் பின்னரே தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள முடியும்.
கருத்துக்கணிப்புகளின்படி, ஜனநாயகக் கட்சி முன்னிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மிச்சிகன் மாநில செனட் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் அப்துல் எல்-சயீத் மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்.
அப்துல் எல்-சயீத் யூதர்கள், கறுப்பின மக்கள் மற்றும் வெள்ளையர்கள் மீது வெறுப்பைக் கொண்டிருப்பதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.








