டித்வா புயலினால் சேதமடைந்த வீதி உட்கட்டமைப்புகளை புனரமைத்து மேம்படுத்துவதற்காக சுமார் 3.33 பில்லியன் ரூபா பெறுமதியான மூன்று ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை தீர்மானத்தின்படி, சேதமடைந்த பல வீதிப் பகுதிகளை புனரமைப்பதற்கான ஒப்பந்தக்காரர்களைத் தெரிவு செய்ய தேசிய போட்டிக் கொள்முதல் நடைமுறையின் கீழ் கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டன.
கேள்விப்பத்திரங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, உயர்மட்ட கொள்முதல் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், குறைந்த விலையில் முன்வைக்கப்பட்ட தகுதியான கேள்விப்பத்திரங்களை சமர்ப்பித்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்குவதற்கான போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரின் முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, கம்பளை – நாவலப்பிட்டி (B013) வீதியின் 8+500 கிலோமீற்றர் முதல் 16+300 கிலோமீற்றர் வரையிலான பகுதிகள் மற்றும் உலப்பனை – பூஸ்ஸல்லாவ (B431) வீதியின் 0+000 கிலோமீற்றர் முதல் 6+440 கிலோமீற்றர் வரையிலான பகுதிகளை புனரமைத்து மேம்படுத்துவதற்காக 852.83 மில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தம் ELS Construction (Pvt) Ltd நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தக் காலம் நான்கு மாதங்களாகும்.
அதேவேளை, B461 வீதியின் 11+000 கிலோமீற்றர் முதல் 27+700 கிலோமீற்றர் வரையிலான 16.77 கிலோமீற்றர் பகுதியை புனரமைத்து மேம்படுத்துவதற்காக 1,516.08 மில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தம் Jayasinghe Contractors (Pvt) Ltd நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 27+700 கிலோமீற்றர் முதல் 30+800 கிலோமீற்றர் வரையிலான பகுதியில் வடிகால் திறனை மேம்படுத்துதல் மற்றும் தாங்குச் சுவர்களை நிர்மாணித்தல் ஆகிய பணிகளும் இந்தத் திட்டத்தில் உள்ளடங்குகின்றன. இதற்கான ஒப்பந்தக் காலம் இரண்டு மாதங்களாகும்.
மூன்றாவது ஒப்பந்தமாக, கட்டுகஸ்தோட்டை – மாதவலை – பம்பரல்ல (B205) வீதியின் 19ஆவது கிலோமீற்றர் முதல் 34ஆவது கிலோமீற்றர் வரையிலான 15 கிலோமீற்றர் பகுதியை புனரமைத்து மேம்படுத்துவதற்காக 965.37 மில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தம் RR Construction (Pvt) Ltd நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனுடன், வத்தேகம – கண்டேனுவர – வாரியபொல வீதியின் 1ஆவது கிலோமீற்றர் முதல் 5ஆவது கிலோமீற்றர் வரையிலான நான்கு கிலோமீற்றர் பகுதியில் சேதமடைந்த வீதிப் பகுதிகள் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட இடங்களைப் புனரமைக்கும் பணிகளும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடங்குகின்றன. இதற்கான ஒப்பந்தக் காலம் மூன்று மாதங்களாகும்.
இந்த மூன்று ஒப்பந்தங்களினதும் மொத்த பெறுமதி, பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் ஏனைய பொருந்தக்கூடிய வரிகள் தவிர்த்து 3,334.28 மில்லியன் ரூபாவாகும்.








