சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், இலங்கையின் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தைத் தரவுகளின்படி, கடந்த ஒரு வாரத்தில் ஒரு பவுண் தங்கத்தின் விலை சுமார் 6,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.
இலங்கையில் தங்கத்தின் விலை
கடந்த திங்கட்கிழமை (26) 332,200 ரூபாவாகக் காணப்பட்ட 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று 326,600 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது.
அதேபோன்று, இந்த வார ஆரம்பத்தில் 361,000 ரூபாவாகக் காணப்பட்ட 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று 355,000 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.
சர்வதேசச் சந்தையில் விலை வீழ்ச்சிக்கான காரணங்கள்
சர்வதேசச் சந்தையில் இந்த மாத ஆரம்பத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 4,200 அமெரிக்க டொலராகக் காணப்பட்ட நிலையில், தற்போது அது சுமார் 3,900 டொலராகக் குறைவடைந்துள்ளது.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதால், எதிர்காலத்தில் பணவீக்கம் மீண்டும் உயரக்கூடும் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை அதிகரிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் வலுப்பெற்றுள்ளது.
வட்டி விகிதங்கள் அதிகரிக்கும்போது, வட்டி வருமானத்தை வழங்காத தங்கம் போன்ற முதலீட்டுச் சொத்துக்கள் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் குறைவடையக்கூடும்.
அத்துடன், அமெரிக்கத் தேர்தல் காலத்தை முன்னிட்டு அமெரிக்க டொலர் வலுப்பெற்றுள்ளமையும் சர்வதேசச் சந்தையில் தங்கத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளமையும் விலை வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளதாகச் சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.








