பலஸ்தீனத்தின் ஹெப்ரோன் நகரம் தொடர்ந்து ஒன்பதாவது நாளாக இஸ்ரேலிய இராணுவத்தின் முற்றுகைக்குள் இருப்பதாகவும், இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன், நகரின் பொருளாதாரத்திற்குப் பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் நகர மேயர் தெரிவித்துள்ளார்.
நகருக்குள் எவரும் நுழையவோ அல்லது வெளியேறவோ முடியாத நிலை காணப்படுவதாக ஹெப்ரோன் நகர மேயர் யூசுப் அல்-ஜபாரி அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளார்.
நகரின் ஒவ்வொரு வீதியிலும் இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐன் தீர் பஹா மற்றும் அல்-ஜல்தே ஆகிய பகுதிகளை மையப்படுத்தி இந்த முற்றுகை முன்னெடுக்கப்படுவதுடன், அங்குள்ள வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, 3,300 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளதுடன், மேலும் 1,500 இற்கும் அதிகமானோர் குறித்த பகுதிகளில் சிக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பலஸ்தீனப் பொருளாதாரத்தில் 40 சதவீதப் பங்களிப்பை வழங்கும் ஹெப்ரோன் நகரில், இந்த முற்றுகையினால் நாளாந்தம் 4 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பொருளாதார இழப்பு ஏற்படுவதாகவும், நகரசபை உட்கட்டமைப்புகளுக்கு 2 மில்லியன் டொலர் பெறுமதியான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மேயர் தெரிவித்துள்ளார்.
தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், உற்பத்திப் பொருட்களை வெளியே அனுப்புவதிலும் தடைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்களும் தமது பணியிடங்களுக்குச் செல்ல முடியாத நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐந்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதால் 80,000 இற்கும் மேற்பட்டோர் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன், நகருக்கு வெளியேயுள்ள நோயாளர்களை வைத்தியசாலைகளுக்குக் கொண்டு வருவதிலும் தடைகள் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி ஃபர்ஷ் அல்-ஹவா சோதனைச் சாவடியில் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து இந்த முற்றுகை முன்னெடுக்கப்படுவதாகவும், இது பலஸ்தீன மக்கள் மீதான கூட்டுத் தண்டனை எனவும் யூசுப் அல்-ஜபாரி தெரிவித்துள்ளார்.
ஹெப்ரோன் நகரிலிருந்து மாத்திரமன்றி, ஒட்டுமொத்த பலஸ்தீனத்திலிருந்தும் மக்கள் வெளியேறுவது குறித்து சிந்திக்கத் தூண்டுவதே இஸ்ரேலின் நோக்கம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
குறித்த தாக்குதலில் இரண்டு இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதுடன், மேலும் மூவர் காயமடைந்தனர். இதன்போது, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரண்டு பலஸ்தீன ஆயுததாரிகளும் இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்டனர்.
மூலம்: அல் ஜசீரா








