ஐந்து கண்டங்களைச் சேர்ந்த 22 நாடுகளில் உள்ள துறைமுகத் தொழிலாளர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இந்தப் போராட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாக அமையும் எனத் தொழிலாளர்களும் ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
‘துறைமுகத் தொழிலாளர்களின் சர்வதேச நடவடிக்கை தினம்’ என அழைக்கப்படும் இந்தப் போராட்டம், ‘போருக்காகத் துறைமுகத் தொழிலாளர்கள் பணியாற்ற மாட்டார்கள்’ (Dockworkers do not work for war) என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படுகிறது.
இதில் ஐந்து கண்டங்களைச் சேர்ந்த 22 நாடுகளின் 110 துறைமுகங்களும் 25 தொழிற்சங்கங்களும் பங்கேற்கின்றன.
“ஒவ்வொரு தொழிற்சங்கமும் தமக்கேற்ற வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும். இருப்பினும், அனைவரும் ஒரே கொள்கைகளையும் போராட்ட இலக்கையும் அடிப்படையாகக் கொண்டு ஒன்றிணைவார்கள்” என இத்தாலியின் USB தொழிற்சங்கத்தின் போக்குவரத்து மற்றும் துறைமுகப் பிரிவின் தேசியச் செயலாளர் பிரான்செஸ்கோ ஸ்டாசியோலி அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு காஸாவிலிருந்து வெளியேறி, தற்போது ஜேர்மனியின் ஹம்பர்க் நகரில் வசிக்கும் துறைமுகத் தொழிலாளரான முஹம்மத் அல் அத்தார், “தொழிலாளர்களே உண்மையான சக்தி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உலகளாவிய வேலைநிறுத்தம் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிவித்த அவர், அதேவேளை காஸா விவகாரத்தில் ஜேர்மனியில் உள்ள தனது தொழிற்சங்கமான Verdi கடைப்பிடித்து வரும் மௌனம் குறித்து ஆழ்ந்த ஏமாற்றமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
.காஸா மீதான தாக்குதல்கள் தொடர்பில் அந்தத் தொழிற்சங்கம் புரிந்துகொள்ள முடியாத மௌனத்தைக் கடைப்பிடிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மூலம்: அல் ஜசீரா (Al Jazeera)







