களனி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நீரேற்று நிலையத்தை மேம்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கைக்கு ஜப்பான் சுமார் 456 கோடி ரூபா (217.9 கோடி யென்) நிதியுதவியை வழங்கியுள்ளது.
இதற்கான பரிமாற்றக் குறிப்புகள் மற்றும் மானிய ஒப்பந்தம் ஆகியவை நேற்று முன்தினம் (28) நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் கைச்சாத்திடப்பட்டதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவும், ஜப்பான் அரசாங்கத்தின் சார்பில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகியோ இசோமட்டாவும் பரிமாற்றக் குறிப்புகளில் கைச்சாத்திட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மானிய ஒப்பந்தத்தில் ஹர்ஷன சூரியப்பெருமவும், இலங்கையிலுள்ள ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்தின் (JICA) பிரதம பிரதிநிதி ஷிகியோ ஹொன்சுவும் கைச்சாத்திட்டனர்.
ஜப்பானின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்தின் ஊடாக இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.
வெள்ள அபாயத்தைக் குறைக்கும் திட்டம்
வத்தளை மற்றும் பேலியகொடை பகுதிகளை உள்ளடக்கிய முதுன் எல உபவடிநிலப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை நீண்டகால அடிப்படையில் கட்டுப்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
குறிப்பாக, அதிக மழைவீழ்ச்சி மற்றும் களனி ஆற்றின் நீர்மட்ட உயர்வு காரணமாக இப்பகுதிகளில் அடிக்கடி வெள்ள அபாயம் ஏற்படுகின்றது.
இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ், செக்கனுக்கு 15 கன மீற்றர் நீரை வெளியேற்றக்கூடிய புதிய நீரேற்று நிலையமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.
அத்துடன், நீரேற்று நிலையத்தின் செயற்பாடுகளைக் கண்காணித்து கட்டுப்படுத்துவதற்கான நவீன கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் தரவுப் பெறுகை முறைமையும் (SCADA) நிறுவப்படவுள்ளது.
களனி ஆற்றின் நீர்மட்டம் உயரும்போது மழைநீரை வினைத்திறனுடன் வெளியேற்றுவதன் மூலம், சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கவும், நீர்வடிகால் மற்றும் வெள்ள முகாமைத்துவத்தை மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நகர்ப்புற மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்தல், பொருளாதார நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுத்தல், நிலையான நகர அபிவிருத்தியை ஊக்குவித்தல் மற்றும் முதலீடுகளுக்குச் சாதகமான சூழலை உருவாக்குதல் ஆகியவையும் இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
மேலும், வெள்ளத்தினால் குடியிருப்புப் பகுதிகள், வணிக நிலையங்கள், கைத்தொழில் நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்துக் கட்டமைப்புகளுக்கு ஏற்படும் சேதங்களைக் குறைக்கவும் இத்திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, வர்த்தகம், சரக்குப் போக்குவரத்து மற்றும் போக்குவரத்துத் துறைகளின் முக்கிய மையமாகப் பேலியகொடை தொடர்ந்து அபிவிருத்தியடைவதற்கு மேம்படுத்தப்பட்ட வெள்ள முகாமைத்துவக் கட்டமைப்பு ஆதரவளிக்கும்.
அத்துடன், காலநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் ஆற்றலை வலுப்படுத்துவதுடன், கொழும்பு பெருநகரப் பிராந்தியம் முழுவதிலும் வெள்ள முகாமைத்துவத்தை மேம்படுத்தவும் இத்திட்டம் பங்களிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மேற்பார்வையின் கீழ், இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் (SLLDC) நடைமுறைப்படுத்தவுள்ளது.
இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, அனர்த்த அபாய முகாமைத்துவம் மற்றும் நிலையான அபிவிருத்தி முயற்சிகளுக்கு ஜப்பான் தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவின் மற்றுமொரு வெளிப்பாடாக இந்த நிதியுதவி அமைவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால அபிவிருத்தி ஒத்துழைப்பில் இது மற்றுமொரு முக்கிய மைல்கல்லாகும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.








