மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதை ஊக்குவிப்பதுடன், அது தொடர்பான பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில், நாடளாவிய ரீதியில் விசேட தேசிய வேலைத்திட்டமொன்று எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.
பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றின் தலைமையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.
பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத் தலைவரும் அமைச்சருமான சரோஜா சாவித்ரி போல் ராஜ் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (02) தொகுதி மற்றும் மாவட்ட மட்டங்களில் சுகாதார முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என்பன ஏற்பாடு செய்யப்படவுள்ளன. இவற்றில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாகப் பங்கேற்று, மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பெண்களை ஊக்குவிக்கவுள்ளனர்.
குறிப்பாக, கிராமப்புறங்கள், பெருந்தோட்டப் பகுதிகள், நகர்ப்புற உயர்மாடிக் குடியிருப்புகள் மற்றும் போதிய சுகாதார வசதிகள் கிடைக்காத பகுதிகளில் வசிக்கும் பெண்கள், சுவனாரி மருத்துவ நிலையங்களுக்குச் சென்று மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனைகளை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படவுள்ளனர்.
மேலும், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் இளஞ்சிவப்பு நிற ரிப்பன்கள், கைக்காப்புகள் மற்றும் ஆடைகளை அணிவதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள், இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 6,000 புதிய மார்பகப் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், இந்நோயினால் சுமார் 1,000 பெண்கள் உயிரிழப்பதாகவும் தெரிவித்தனர்.
மார்பகப் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தால் முழுமையாகக் குணப்படுத்த முடியும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இருப்பினும், அச்சம், தயக்கம் மற்றும் போதிய விழிப்புணர்வின்மை காரணமாகப் பல பெண்கள் சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
35 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்களில் சுமார் 50 சதவீதமானோர் மாத்திரமே தற்போது சுவனாரி மருத்துவ நிலையங்களுக்குச் சென்று பரிசோதனைகளை மேற்கொள்வதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால், பரிசோதனைத் திட்டங்களில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
இதற்கிடையில், அடுத்த ஆண்டு 35 முதல் 45 வயதுக்குட்பட்ட அனைத்துப் பெண்களையும் புற்றுநோய்ப் பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதற்காகப் பரிந்துரைக்கும் விரிவான தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் இயங்கும் மகளிர் சங்கங்கள் உள்ளிட்ட தொடர்புடைய தரப்பினரின் பங்களிப்புடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் மூலம் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை எதிர்வரும் ஜனவரி மாதத்தில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் முன்னெடுப்பது குறித்தும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இதற்கு மேலதிகமாக, பாலின உணர்வுள்ள வரவு செலவுத் திட்டமிடல் மற்றும் பராமரிப்புப் பொருளாதாரம் தொடர்பான விடயங்களும் ஆராயப்பட்டன. தேசிய பராமரிப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஆலோசனை உதவிகளைப் பெற்றுக்கொள்வது மற்றும் தேசிய வரவு செலவுத் திட்டச் செயற்பாட்டில் பாலின சமத்துவத்தை முன்னிறுத்தும் கொள்கைகளை உள்ளடக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், குடும்ப வன்முறையைத் தடுப்பது, பராமரிப்புச் செலவுகளைப் பெற்றுக்கொள்வது மற்றும் சிறுவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகளை வழங்குவதைத் தடை செய்வது தொடர்பான சட்டங்களில் காணப்படும் குறைபாடுகளைக் களைவதற்கான திருத்தங்களை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
குறித்த சட்டத் திருத்தங்களை முன்னெடுப்பதற்காக நீதி அமைச்சுடன் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவமும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.








