ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டின் தெற்குப் பகுதியில் இரண்டு அதிவேக ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் குறைந்தது 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், 2013ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஸ்பெயினில் இடம்பெற்ற மிக மோசமான ரயில் விபத்தாக இது பதிவாகியுள்ளது.
ரயில் கட்டுப்பாட்டு மையத்தில் எடுக்கப்பட்ட விளக்கமளிக்க முடியாத தீர்மானமே இந்த விபத்துக்குக் காரணமாக அமைந்ததாக ஸ்பெயினின் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். கணினி கோளாறு காரணமாக ஆரம்பத்தில் ரயில்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விபத்தில் தொடர்புடைய ரயில் சேவை நிறுவனமான இரியோ (Iryo), தனது ரயில் பின்னால் வந்த ரென்ஃபே (Renfe) ரயிலால் மோதப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இரண்டு ரயில்களிலும் 500க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற இடத்திற்குச் சென்ற ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், நாடு முழுவதும் துயரத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, முக்கிய அரசியல் கட்சிகள் பொதுத் தேர்தலுக்கான தமது பிரசார நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளன.
விபத்து இடம்பெற்ற இடத்தில் நிலவிய சூழல் மிகவும் மோசமானதாக இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான ரயில்களில் ஒன்றில் பயணித்த ஸ்பெயின் ஊடகவியலாளர் ரொபர்டோ கோமஸ், சம்பவ இடத்தில் நிலவிய சூழல் மிகவும் குழப்பமானதாகவும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ரயில் பாதுகாப்பு கட்டமைப்பில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அவை நிவர்த்தி செய்யப்படும் எனப் பிரதமர் பெட்ரோ சான்செஸ் உறுதியளித்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதே ரயில் பாதையில் இடம்பெற்ற மற்றொரு ரயில் விபத்தில் 48 பேர் உயிரிழந்த சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டு விபத்துகளுக்கும் இடையிலான காரணங்கள் தொடர்பில் தற்போது எந்தவொரு ஒற்றுமையும் தென்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர், இதனைத் தீர்மானிக்க வேண்டியது விசாரணைக் குழுவே என்றும் தெரிவித்துள்ளார்.
“ஸ்பெயின் போன்ற ஒரு நாட்டில் ஒரே ஆண்டில் இரண்டு அதிவேக ரயில் விபத்துகள் இடம்பெறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது” எனத் தெரிவித்த பிரதமர், நாட்டின் அதிவேக ரயில் போக்குவரத்து கட்டமைப்பு மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை முதல் மூன்று நாட்கள் தேசிய துக்க தினங்களாக அனுஷ்டிக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.







