இலங்கை மாணவர்களுக்குத் தொழிற்பயிற்சிகள், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்கும் நோக்கில், கொரிய குடியரசின் நிறுவனங்களுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தொழிற்பாட்டுப் பணிச்சட்டகத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம், தொழிற்பயிற்சிகள் மற்றும் மாணவர் பரிமாற்ற வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக, கொரிய குடியரசின் வெங்க்சின் (Changshin) பல்கலைக்கழகத்துடன் 2023ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிட்டிருந்தது.
எனினும், குறித்த ஒப்பந்தத்தில் காணப்பட்ட சில ஏற்பாடுகள் தொடர்பான சிக்கல்கள் காரணமாக, அதனை இதுவரை நடைமுறைப்படுத்த முடியாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே முறையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நோக்கில், ஐந்து முக்கிய தரப்பினரை உள்ளடக்கிய புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமும் தொழிற்பாட்டுப் பணிச்சட்டகமும் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தினால் தெரிவுசெய்யப்படும் இலங்கை மாணவர்கள், கொரிய குடியரசின் வெங்க்சின் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புகளைப் பெறவுள்ளனர்.
அத்துடன், கல்வியை நிறைவு செய்த பின்னர், குறித்த மாகாணத்திலுள்ள தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கும் நீண்டகாலம் அங்கு வசிப்பதற்குமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தப் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தொழிற்பாட்டுப் பணிச்சட்டகம், இலங்கையின் தொழில் அமைச்சு, தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம், கொரிய குடியரசின் சம்பந்தப்பட்ட மாகாணம், சசோன் வணிக மற்றும் கைத்தொழில் பேரவை மற்றும் வெங்க்சின் பல்கலைக்கழகம் ஆகிய ஐந்து தரப்பினருக்கும் இடையில் மேற்கொள்ளப்படவுள்ளது.








