மேற்கு-மத்திய வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த ‘அர்னாப்’ அதி தீவிர புயல், இந்தியாவின் ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகள் ஊடாகக் கரையைக் கடந்து வருவதால், இலங்கையில் அதன் தாக்கம் படிப்படியாகக் குறைவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் எனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
எனவே, இவ்வாறான காலநிலை மாற்றங்களால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைக் குறைத்துக்கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.








