வெலிங்டனில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரை இந்திய அணி 3–0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களைக் குவித்தது.
நியூசிலாந்து அணி சார்பில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய டேரில் மிட்செல், 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 89 ஓட்டங்களைக் குவித்தார். இதில் 5 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கின. பின் ஆலன் 40 ஓட்டங்களைப் பெற்றார்.இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இதனையடுத்து, 199 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
இந்திய அணியின் அபிஷேக் சர்மா, 38 பந்துகளில் 111 ஓட்டங்களைக் குவித்து மிரட்டினார். அவரது அதிரடி ஆட்டத்தில் 9 பவுண்டரிகளும் 11 சிக்ஸர்களும் அடங்கின. அவருடன் இணைந்து துடுப்பெடுத்தாடிய வைபவ் சூரியவன்ஷி, 19 பந்துகளில் 45 ஓட்டங்களைப் பெற்றார்.
இறுதியில் நமன் திர் 4 ஓட்டங்களுடனும் திலக் வர்மா 1 ஓட்டத்துடனும் களத்தில் இருக்க, இந்திய அணி 13.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.இன்னும் 40 பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்திய அணி இந்த அபார வெற்றியைப் பதிவு செய்து, தொடரையும் தன்வசப்படுத்தியது.







