பாலஸ்தீன பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்றைக் காண்பதுடன், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபத்தா அல்-சிசி வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸுடனான சந்திப்பின் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இதன் போது, காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்துவதற்கான எகிப்தின் முயற்சிகளைப் பாராட்டிய குட்டரெஸ், மனிதாபிமான உதவிகள் காஸாவுக்குள் கொண்டு செல்லப்படுவதையும், அவை தேவையுடைய மக்களைச் சென்றடைவதையும் உறுதிப்படுத்துவதில் எகிப்து வகிக்கும் பங்கையும் வரவேற்றுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கு பாலஸ்தீன பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்படுவது அவசியம் எனத் தெரிவித்த குட்டரெஸ், இறுதித் தீர்வு எட்டப்படும் வரை பாலஸ்தீன பிரச்சினை மத்திய கிழக்கின் மையப் பிரச்சினையாகத் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்ட அவர், காஸா மற்றும் மேற்குக் கரையில் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான மீறல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் தனது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.








