இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தைக் கடந்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, ஜனவரி 1ஆம் திகதி முதல் ஒக்டோபர் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1,813,484 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இதற்கிடையில், ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 119,805 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளை அனுப்பிய நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இதன்படி, குறித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 482,944 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 169,405 பேரும், சீனாவிலிருந்து 120,980 பேரும், ஜெர்மனியிலிருந்து 102,920 பேரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
மேலும், ஒக்டோபர் மாதத்தின் முதல் 22 நாட்களிலும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர்.
இதற்கமைய, குறித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 45,530 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







