தனது சிறைவாசத்தின் 50ஆவது நாளை முன்னிட்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் கடுமையான பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அவர், மக்களின் குறைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்காகத் தனது சிறைவாசத்தைப் பயன்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு உண்மையான பொருளாதார நிவாரணம் கிடைக்குமானால், 50 நாட்கள் மட்டுமன்றி 500 நாட்கள்கூடச் சிறையில் இருக்கத் தயாராக இருப்பதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மின்சாரக் கட்டணத்தை மூன்றில் இரண்டு பங்காகக் குறைத்தல், இறக்குமதி விலையிலேயே எரிபொருளை வழங்குதல், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சம்பளத்தை உயர்த்துதல், பிணையும் வட்டியும் இன்றி வங்கிக் கடன்களை வழங்குதல், டொயோட்டா விட்ஸ் (Toyota Vitz) ரக கார்களை சுமார் 12 இலட்சம் ரூபாய்க்குப் பெற்றுக்கொள்ள வழிவகுத்தல், அரிசி விலையைக் குறைத்தல் மற்றும் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகளை முழுமையாக நீக்குதல் போன்ற வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றினால், தனது சிறைவாசத்தைப் பயனுள்ள தியாகமாகக் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு எந்தவிதமான நிவாரணமும் கிடைக்காத நிலையில், திறைசேரி நிரம்பி வழிவதாகக் கூறப்படும் நாட்டில் தாம் வாழ்வதாகச் சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ஷ, ஒரு குடும்பத்தைக் குறிவைப்பதன் மூலம் நாட்டின் கடுமையான பிரச்சினைகளை மூடிமறைத்துவிட முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றம் இறுதியில் தன்னை நிரபராதி என விடுவிக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ள அவர், தனது சிறைவாசம் அரசியல் ரீதியான சிந்தனைகளை முடக்கிவிடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் பயணத்தை நினைவுகூர்ந்த அவர், உண்மையான வெற்றி என்பது அதிகாரத்தில் தங்கியிருப்பதில் அல்ல, மக்களின் இதயங்களில் இடம்பிடிப்பதிலேயே தங்கியுள்ளது என்பதைத் தனது தந்தை கற்றுக்கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டினதும் மதத்தினதும் பாரம்பரியங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ள அவர், ‘காவன்திஸ்ஸ’ யானை தொடர்பான சர்ச்சை குறித்துக் கவலை வெளியிட்டுள்ளார். நாட்டின் கலாசார மற்றும் இயற்கை பாரம்பரியங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நாட்டின் முதல் குடிமகனுக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“என்னைச் சிறையில் அடைக்க முடிந்தாலும், எம்முடன் நிற்கும் மக்களின் எதிர்பார்ப்புகளைச் சிறைபிடிக்க முடியாது” எனத் தெரிவித்து நாமல் ராஜபக்ஷ தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.







