தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்குக் கடத்த முயன்ற இரு வெவ்வேறு சம்பவங்களில், 2 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகள், 531 கிலோகிராம் சுக்கு மற்றும் 1,500 மஞ்சள் தூள் பக்கெட்டுகள் ஆகியவற்றை இந்திய மரைன் பொலிஸார் மற்றும் ‘கியூ’ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தை அடுத்த வேதாளை கிராம ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நேற்று அதிகாலை ‘கியூ’ பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் அடங்கிய ஐந்து மூட்டைகளைப் பொலிஸார் கண்டுபிடித்தனர்.
ஒவ்வொரு மூட்டையிலும் 40,000 மாத்திரைகள் வீதம் மொத்தம் 2 இலட்சம் மாத்திரைகள் இருந்துள்ளன.
பொலிஸாரைக் கண்டதும் அங்கிருந்த நபர்கள் தங்களது இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து, மாத்திரைகள் அடங்கிய ஐந்து மூட்டைகளையும் இருசக்கர வாகனத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
தப்பியோடிய நபர்களைக் ‘கியூ’ பிரிவு பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகளின் சர்வதேச சந்தைப் பெறுமதி சுமார் 3 கோடி இந்திய ரூபாய் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கடற்கரைப் பகுதியில் இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், மரைன் பொலிஸ் ஆய்வாளர் ஜான்சிராணி தலைமையிலான பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது, பதிவு செய்யப்படாத விசைப்படகு ஒன்றில் ஏற்றப்பட்டிருந்த 18 சாக்கு மூட்டைகளில் 531 கிலோகிராம் சுக்கு இருப்பது கண்டறியப்பட்டது. அத்துடன், நான்கு சாக்கு மூட்டைகளில் 1,500 மஞ்சள் தூள் பக்கெட்டுகளும் இருந்துள்ளன.
இதனையடுத்து, குறித்த பொருட்களையும் இயந்திரத்துடன் கூடிய படகையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் படகைச் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே நாளில் வேதாளை மற்றும் புதுமடம் கடலோரப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட இரு வெவ்வேறு நடவடிக்கைகளில், இலங்கைக்குக் கடத்த முயன்ற பெருமளவிலான வலி நிவாரணி மாத்திரைகள், சுக்கு மற்றும் மஞ்சள் தூள் பக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








