முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌஷி, அரச பத்திரிகையொன்றில் பொதுமன்னிப்பு அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
தனிப்பட்ட தேவைக்காக அரச வாகனத்தைப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமையவே இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் 29ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, 6.6 மில்லியன் ரூபாவை அரசாங்கத்துக்கு மீளச் செலுத்துமாறு ஏ.எச்.எம். பௌஷிக்கு உத்தரவிடப்பட்டது.
அத்துடன், குறித்த முறைகேடான செயற்பாட்டுக்காகப் பொதுமன்னிப்புக் கோரும் அறிவித்தலை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாகும் அரச பத்திரிகைகளில் வெளியிடுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இலங்கையின் அனர்த்த முகாமைத்துவப் பணிகளுக்காக நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாகனமொன்றைத் தனது தனிப்பட்ட தேவைக்காகப் பௌஷி பயன்படுத்தியதன் மூலம் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்தச் செயற்பாடு பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் தவறான நடவடிக்கை எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது.
இந்நிலையில், அரச பத்திரிகைகளான சிலுமின, சண்டே ஒப்சர்வர் மற்றும் தினகரன் ஆகியவற்றில் பௌஷியின் புகைப்படத்துடன் கூடிய பொதுமன்னிப்பு அறிவித்தலை வெளியிடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








